இந்திய வீரர்கள் பலி விவகாரம்: பாகிஸ்தான் தூதருக்கு சம்மன்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியானது குறித்து, தில்லியில் உள்ள அந்நாட்டுத்


இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியானது குறித்து, தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் ஊடுருவல்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. அந்தச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்களும், ஊடுருவல்காரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி, வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது, கடந்த 21-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் மூவர் கொல்லப்பட்டது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த மோதலின்போது, ஆயுதம் தாங்கிய பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் இருவர் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களது உடல்களை பாகிஸ்தான் அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லையை ஒட்டியும் பாகிஸ்தான் படையினர், தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறித்தும், அந்நாட்டு அரசிடம் தனது கவலைகளை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com