சபரிமலை வழக்கு: நவ.13-இல் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை
சபரிமலை வழக்கு: நவ.13-இல் விசாரணை


சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை அடுத்த மாதம் 13-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட 19 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை அடுத்த மாதம் 13-ஆம் தேதி நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மேத்யூ ஜே.நெடும்பராவிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
இதன் மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது. இந்தத் தீர்ப்பு ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சபரிமலை அமைந்துள்ள கேரளத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த வாரம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்கள் கோயிலுக்கு வருவதை பெண் பக்தர்களே தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி சில பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு செல்ல முயன்றபோதிலும், கடைசி நேரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்புகளில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை அவசர வழக்காக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அடுத்த மாதம் 13-ஆம் தேதி இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com