சிபிஐ சிறப்பு இயக்குநரைக் கைது செய்ய இடைக்காலத் தடை

லஞ்சம் வாங்கியதாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், அதன் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவைக் கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
சிபிஐ சிறப்பு இயக்குநரைக் கைது செய்ய இடைக்காலத் தடை


லஞ்சம் வாங்கியதாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், அதன் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவைக் கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரம் தொடர்பாக, இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்புக் குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்காக, அஸ்தானா மற்றும் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக, அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து, தேவேந்தர் குமார் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். 
மனுக்கள் தாக்கல்: இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென அஸ்தானா மற்றும் தேவேந்தர் குமார் ஆகியோர் சார்பில், தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
மேலும், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், இந்த மனுக்கள் மீது நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரணை நடத்துவார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, நீதிபதி வாஜிரி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அஸ்தானா மற்றும் தேவேந்தர் ஆகியோருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை ஆதாரமற்றது: அஸ்தானா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அமரேந்திர ஷாரன், அஸ்தானாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. இந்த வழக்கானது, சட்டத்துக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் குற்றவாளியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை ரத்து செய்தும், அஸ்தானாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
இதனிடையே, தேவேந்தர் குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் தயான் கிருஷ்ணன், அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார். 
இடைக்காலத் தடை: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வாஜிரி தெரிவித்ததாவது: அஸ்தானாவுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதே வேளையில், கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமாருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.ஷர்மா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிடப்படுகிறது. மேலும், சிபிஐ-யை நிர்வகித்து வரும் பணியாளர் மற்றும் பயிற்சி துறையும் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை, வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை, மனுதாரர்கள் தங்கள் ஆதாரங்களைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 
7 நாள்கள் காவல்: இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே, அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். 
இதனை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி சந்தோஷ் சினேகி மன், தேவேந்தர் குமாரை 7 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்டு வெளியே அழைத்து வரப்படும் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com