ராஜஸ்தானில் 31 மலைகள் மாயம்!: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் 31 மலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள தகவல்
ராஜஸ்தானில் 31 மலைகள் மாயம்!: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி


ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் 31 மலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
மேலும், அந்த பகுதியில் சட்டவிரோதமாக சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை 48 மணி நேரத்துக்குள் நிறுத்த வேண்டும் என்றும் ராஜஸ்தான் அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஆரவல்லி மலைத் தொடரில் சட்டவிரோதமாக சுரங்க பணிகள் நடைபெறுவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்குர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
இந்த வழக்கில் மலைத் தொடரின் தற்போதைய நிலைமை குறித்து ராஜஸ்தான் அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. மேலும், இந்த சட்டவிரோத சுரங்க பணிகள்தொடர்பாக, மத்திய அதிகாரமளித்தல் குழுவின் அறிக்கையும் நீதிபதிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் ராஜஸ்தான் மாநில ஆரவல்லி மலைத்தொடரில் 31 மலைப்பகுதிகள் மறைந்து விட்டன என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆரவல்லி மலைத் தொடரில் சுரங்க பணிகள் மேற்கொள்வதற்காக ராஜஸ்தான் அரசு, அதன் பங்காக ரூ. 5, 000 கோடி பெற்று வருகிறது. எனினும், லட்சக்கணக்கான மக்களின் உயிரை கருத்தில் கொண்டு, 115. 34 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் சுரங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். 31 மலைகள் மாயமாகிவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மலைகள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அவை தடுப்புச் சுவராக பயன்படுகின்றன. ஆனால் உண்மையில், 15-20 சதவீத மலைப் பகுதிகள் முற்றிலும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. மலையை அழித்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள்? தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்ததற்கு ஆரவல்லி மலைத்தொடரின் சில பகுதிகள் மறைந்தது கூட காரணமாக இருக்கலாம். ரூ. 5,000 கோடி வருமானம் பெறுவதற்காக, தில்லியில் உள்ள மக்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. ராஜஸ்தான் அரசு இந்த விவகாரத்தை சாதாரணமாக கையாண்டுள்ளது. அதனால்தான் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது என்றனர்.
மேலும், இந்த உத்தரவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராஜஸ்தான் மாநில தலைமை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com