சிபிஐ அதிகாரிகள் அதிரடி மாற்றம்: இயக்குநர், சிறப்பு இயக்குநருக்கு கட்டாய விடுப்பு

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் அவர்களது பொறுப்புகளில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள் அதிரடி மாற்றம்: இயக்குநர், சிறப்பு இயக்குநருக்கு கட்டாய விடுப்பு

நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநர்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் அவர்களது பொறுப்புகளில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அலோக் வர்மாவுக்குப் பதிலாக, சிபிஐ இடைக்கால இயக்குநராக தேர்வு செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ், உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும், செவ்வாய் - புதன் இடையேயான நள்ளிரவுப் பொழுதில் நடந்து முடிந்தன.
நாகேஸ்வர ராவ், சிபிஐ இடைக்கால இயக்குநரானதும், உடனடி நடவடிக்கையாக, சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்கும் குழுவை மாற்றியமைத்தார். இந்த விசாரணைக் குழுவையும் சேர்த்து 14 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.
நாகேஸ்வர ராவ், ஒடிஸா மாநிலப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். அவரை இப்பதவிக்கு தேர்வு செய்யும் முடிவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு மேற்கொண்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், சிபிஐ அமைப்பில் தற்போது இணை இயக்குநராகப் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி நாகேஸ்வர ராவ், சிபிஐ இயக்குநருக்குரிய கடமைகள் மற்றும் செயல்பாடுகளை இடைக்கால ஏற்பாடாகக் கவனிப்பதற்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிபிஐ இயக்குநருக்கு உரிய கடமைகள் மற்றும் பொறுப்புகளை அவர் உடனடியாக ஏற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவர் மீதான புகார்களையும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அஸ்தானாவுக்கு எதிரான எஸ்ஐடி விசாரணை என்பது பாரபட்சமற்றதாக, நியாயமானதாக இருக்கும் என்றும், விசாரணை நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விசாரணைக் குழு மாற்றம்: நாகேஸ்வர ராவ், சிபிஐ இடைக்கால இயக்குநரானதும், உடனடி நடவடிக்கையாக, சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்கும் குழுவை மாற்றியமைத்தார். இதற்கு முன்பு இப்புகாரை விசாரித்தவரான துணை கண்காணிப்பாளர் ஏ.கே.பஸ்ஸி, அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளையருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக் குழுவின் புதிய கண்காணிப்பாளராக சதீஷ் தாகரை நாகேஸ்வர ராவ் நியமித்துள்ளார். சதீஷுக்கு மேற்பார்வையாளராக துணை காவல் இயக்குநர் தருண் கெளபா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் பணியிடமாற்றம்: அலோக் வர்மாவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் மணீஷ் குமார் சின்ஹா நாகபுரிக்கும், அனீஷ் பிரசாத் நிர்வாகத் துறைக்கும், எஸ்.எஸ்.குர்ம் ஜபல்பூருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் மணீஷ் குமார் சின்ஹா, தமிழகம் சார்ந்த குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரியாவார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான வி.முருகேசனிடம், சிபிஐ தலைமையகத்தில் இணை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜஸ்பீர் சிங், கே.ஆர்.செளராசியா, சாய் மனோகர், அமித் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் அல்லது கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மோதலின் தொடக்கம்: முன்னதாக, சிபிஐ அமைப்பில் கூடுதல் இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு, சிறப்பு இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டபோது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் (சிவிசி) சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ஆட்சேபங்களை தெரிவித்தார்.
அந்த ஆட்சேபங்களை சிவிசி பதிவு செய்து கொண்ட போதிலும், ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமித்தது. மேலும், இயக்குநருக்கு அடுத்தபடியான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம், அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் மீது 10-க்கும் மேற்பட்ட ஊழல் புகார் இருப்பதாகவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத்துக்கு எதிரான விசாரணைகளை தடுக்க முற்பட்டதாகவும் அஸ்தானா புகார் தெரிவித்தார்.
சிவிசி விசாரணை: இதுதொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், சிவிசி விசாரணை மேற்கொண்டது. அப்போது, அஸ்தானாவுக்கு எதிராக 6-க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக அலோக் வர்மா தெரிவித்தார். 
இதற்கிடையே, அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வது தொடர்பான ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியதால் அவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் வெளியுலகுக்கு தெரியவந்தது.
இந்நிலையில், வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதற்காக அவரிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது கடந்த 15-ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இப்படியாக, அதிகாரிகள் இருவரும், அவர்களுக்கிடையே அதிகார மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பொறுப்புகளில் விடுவித்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு 


சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து விடுவித்து, மத்திய அரசு கட்டாய விடுப்பு வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். பொறுப்பு இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளதற்கும் அவர் தனது மனுவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு உடனடியாக பரிசீலனை செய்தது. அப்போது அலோக் வர்மாவின் மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அலோக் வர்மா மனு விவரம்: கடந்த காலங்களில் சிபிஐ அமைப்பில் விசாரணை அதிகாரி, கண்காணிப்பாளர், இணை இயக்குநர், தலைமை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளின் நியமனங்களும் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டு வந்தன. மனுதாரர் அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பது என மத்திய அரசும், சிவிசி அமைப்பும் இரவோடு, இரவாக எடுத்த நடவடிக்கைள் அப்பட்டமான விதிமீறலாகும்.
உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல சிபிஐ அமைப்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் வர்மா, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசிடம் கேள்விகள் கேட்டார். மேலும், அது தொடர்பான தகவல்களையும் அவர் சேகரித்து வந்தார். இதன் காரணமாகவே, அவர் பொறுப்பிலிருந்து வலுக்கட்டாயமாக விடுவிக்கப்பட்டுள்ளார். 
- காங்கிரஸ் தலைவர் ராகுல் 

சிபிஐ-யின் நம்பகத்தன்மை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. உண்மை நிலையை மோடி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
- இ.கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா

சிபிஐ பிரச்னைகளுக்கு அதன் அதிகாரிகளை விட, மத்திய அரசே முக்கியக் காரணமாகும்.
- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

எந்தச் சட்டத்தின் அடிப்படையில் சிபிஐ இயக்குநர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரதமருக்கு இந்த அதிகாரம் எங்கிருந்து பெறப்பட்டது?
- தில்லி முதல்வர் கேஜரிவால்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com