ம.பி முதல்வர் மகன் மீது தவறான குற்றச்சாட்டா? குழப்பமடைந்துவிட்டேன் என ராகுல் விளக்கம்

மத்தியப் பிரதேச முதல்வர் மகன் கார்த்திகே சௌஹான் மீதான பனாமா ஊழல் குற்றச்சாட்டை குழப்பத்தில் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்கிழமை விளக்கம் தந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேச முதல்வர் மகன் கார்த்திகே சௌஹான் மீதான பனாமா ஊழல் குற்றச்சாட்டை குழப்பத்தில் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்கிழமை விளக்கம் தந்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (திங்கள்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "ஒருபுறம் பாதுகாவலர் இருக்கிறார். மறுபுறம் மாமாஜி (மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சௌஹான்) இருக்கிறார். பனாமா ஆவணங்களில் மாமாஜி மகனின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் பெயரும் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது. பாகிஸ்தான் போன்ற நாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்தியாவில் ஒரு முதல்வரின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குற்றம்சாட்டினார்.    

இதுதொடர்பாக, சிவராஜ் சௌஹான் மகன் கார்த்திகே சௌஹான் சுட்டுரை பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிடுகையில், "பனாமா ஆவணங்களில் எனது ஈடுபாடு உள்ளதாக ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். எனது மற்றும் எனது குடும்பத்தாரின் மதிப்பு சிதைக்கப்பட்டதால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். 48 மணி நேரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோரவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்றார். 

இதையடுத்து, பனாமா ஆவண ஊழலில் தன் பெயர் இருப்பதாக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு கார்த்திகே சௌஹான் இன்று (செவ்வாய்கிழமை) ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு வழக்கை தொடுத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதியின் சிறப்பு நீதிமன்றத்தில் இந்திய தண்டனையியல் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவின் கீழ் வழக்கறிஞர் ஷிரிஷ் ஸ்ரீவஸ்தவா மூலம்,  இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில், இந்தூரில் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை அழைத்து ராகுல் காந்தி இன்று கலந்துரையாடல் நிகழ்த்தினார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது, 

"தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த சில நாட்களாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஆளும் பாஜக ஏராளமான ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அதனால், நேற்று குழப்பமடைந்துவிட்டேன். பனாமா ஆவண வழக்கில் மத்தியப் பிரதேச முதல்வருக்கு எந்த தொடர்பும் இல்லை. எனினும், வியாபம் மற்றும் இணையதள ஒப்பந்தப்புள்ளி ஊழலில் அவருக்கு பங்கு இருக்கிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com