அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ?: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு 

அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையினை உருவாக்கியிருக்கிறது 
அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ?: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு 

புது தில்லி: அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையினை உருவாக்கியிருக்கிறது 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று கடந்த 1994-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்வதற்கு, அதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மேலும், இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர். அதன்படி, அயோத்தி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இந்த வழக்குகளை விசாரிப்பதற்கான தேதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் புதிதாக அமைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முடிவு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையினை உருவாக்கியிருக்கிறது 

இதுதொடர்பாக தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசினாய் அவர் கூறியதாவது: 

அயோத்தி பிரச்சினையை இந்து - முஸ்லிம் இடையிலான பிரச்சினையாக மாற்ற வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று பெரும்பான்மையான இந்துக்கள் விரும்புகின்றனர். 

ஸ்ரீராமர் இந்துக்களின் மத நம்பிக்கையின் அடையாளம். அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் நெடுங்காலமாக பொறுமை இழந்து வருகின்றனர். அது எல்லை மீறி போய் இந்துக்கள் முற்றிலும் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? என்று அச்சமாக உள்ளது.

அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com