ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்துகொள்ளும் முறை அமலுக்கு வந்தது. 
   
இதனால், வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்றைய (திங்கள்கிழமை) நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த தொடர் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளும் உடன் இணைந்து இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அது மீது விதிக்கப்பட்டுள்ள வரி தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும், அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையையும் காங்கிரஸ் முன்வைக்கிறது. 

இதனிடையே, ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 4 சதவீதமாக குறைந்து ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையவுள்ளது. ராஜஸ்தான் அரசின் இந்த அறிவிப்பால், அரசிற்கு ரூ. 2 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என கூறப்படுகிறது. 

இந்த வரிசையில், தற்போது ஆந்திர அரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைப்பதாக அறிவித்துள்ளது. 

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியாக ஆந்திரா அரசு லிட்டருக்கு ரூ.4 வசூலித்து வந்தது. இதன்மூலம், அந்த அரசு ஆண்டுக்கு ரூ.2,240 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை லிட்டருக்கு  ரூ.4-இல் இருந்து ரூ.2 ஆக குறைப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனால், அந்த அரசிற்கு ரூ.1,120 கோடி வருவாய் இழப்பு ஏற்படவுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசை குற்றம்சாட்டி வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைமையிலான இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை.

காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுப்பதற்கு அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஆனால், மாநில அரசுக்கு கிடைக்கும் மிக முக்கிய வருவாயே பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாய் தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com