பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழு அடைப்பு: கேரளம், கர்நாடகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் காரணமாக
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,


பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளம், கர்நாடகம், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும், தலைநகர் தில்லிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மேற்கு பகுதி மாநிலங்களிலும் முழு அடைப்புக்கு பகுதியளவு ஆதரவு காணப்பட்டது. 
கேரளம், கர்நாடகத்தில்...: மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெறும் கேரளத்தில், அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஊழியர்கள் வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மங்களூரில் திறந்திருந்த கடைகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். 
பிகாரில் வன்முறை: பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கடைகளும், பள்ளிகளும் அடைக்கப்பட்டிருந்தன. பழைய பாட்னா நகரில் ரயில் தண்டவாளங்களில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்ததால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
இதனிடையே, ஜெஹனாபாத் மாவட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். முழு அடைப்பு காரணமாக வாகனம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், குழந்தை இறக்க நேரிட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
அஸ்ஸாமில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பாஜக ஆட்சி நடைபெறும் அஸ்ஸாமில் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டன. குவாஹாட்டியில் உள்ள தலைமைச் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒடிஸாவில் ரயில் மறியல் போராட்டங்களால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், அருணாசலப் பிரதேச மாநிலத்திலும் முழு அடைப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குஜராத்தில் பகுதியளவு ஆதரவு: குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் முழு அடைப்புக்கு பகுதியளவு ஆதரவு காணப்பட்டது. குஜராத்தில் ராஜ்கோட், ஆமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் டயர்களை எரித்து, போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கல்வீச்சில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
பாதிப்பில்லை: உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மிúஸாரம் மாநிலத்திலும் முழு அடைப்பால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மாநிலங்களில் பெரும்பாலான கடைகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் திறந்திருந்தன; வாகனங்களின் இயக்கத்திலும் பெரிய அளவில் தாக்கம் இல்லை. பல இடங்களில் ரயில், சாலை மறியல்களில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணிகளில் ஈடுபட்டனர். 
மக்களின் ஆதரவு இல்லை': போராட்டம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், எதிர்க்கட்சிகளின் எதிர்மறை கொள்கையின்படி முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அதற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேற்ற பாதையில் பயணித்து வருகிறது' என்றார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையிலும், பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியிருப்பது, மக்கள் மீதான மத்திய அரசின் அக்கறையின்மையை காட்டுவதாக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சாடினார்.

தமிழகத்தில் பாதிப்பு இல்லை
 முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பேருந்துகள் ஓடின. சில முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன. அரசு பேருந்துகள் வழக்கம் போல் ஓடின. சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரி, ஆட்டோக்கள் ஓடவில்லை. புதுக்கோட்டையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்புத்தூரில் 60 சதவீத கடைகளும் பெரும்பாலான தொழிற்கூடங்களும் மூடப்பட்டிருந்தன. நாகப்பட்டினத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
புதுவையில்... முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மக்கள் ஏற்கவில்லை: பாஜக
 'எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் ஏற்கவில்லை; அதற்கு ஆதரவும் அளிக்கவில்லை' என்று பாஜக கூறியுள்ளது. சர்வதேச பிரச்னைகள் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்பது மக்களுக்குத் தெரியும் என்று பாஜக விளக்கமளித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் இது தொடர்பாக கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் குறுகிய கால பிரச்னையை எதிர்கொண்டுள்ளது உண்மைதான். ஆனால், சர்வதேச சூழல்கள்தான் இதற்கு காரணம் என்பதும், இந்தப் பிரச்னை மத்திய அரசால் ஏற்படவில்லை என்பதும் மக்களுக்கு தெரியும். இதற்கான தீர்வுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. நாட்டு மக்கள், எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்தை ஏற்கவுமில்லை; அதற்கு ஆதரவும் அளிக்கவுமில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com