தெலங்கானா: காங்கிரஸுடன் கைகோக்கிறது தெலுங்கு தேசம்

ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் அரசியல் வரலாற்றில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரஸும் தெலுங்கு தேசமும், தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்காக கைகோக்கவுள்ளன.


ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் அரசியல் வரலாற்றில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரஸும் தெலுங்கு தேசமும், தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்காக கைகோக்கவுள்ளன.
ஆந்திரத்தில் இருந்து பிரிந்து கடந்த 2014-இல் உதயமான தெலங்கானா மாநிலத்தில், அந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தின் முதல் முதல்வராக டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்றார். இந்த அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இருந்த நிலையில், முன்கூட்டியே சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவையை கலைக்கக் கோரி மாநில ஆளுநருக்கு பரிந்துரைத்தார். அதன்படி, சட்டப் பேரவை அண்மையில் கலைக்கப்பட்டது. தற்போது சந்திரசேகர் ராவ் காபந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்தச் சூழலில், தெலங்கானா பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் டிஆர்எஸ் கட்சியை வலுவுடன் எதிர்கொள்வதற்காக காங்கிரஸும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கைகோக்கவிருக்கின்றன. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் இவ்விரு கட்சிகளும் பரம எதிரிகளாக இருந்தவை. சுமார் 36 ஆண்டு கால பகைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அக்கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளன. இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணையவிருக்கிறது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல்.ரமணா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சதா வெங்கட் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம் ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்கு பின், உத்தம் குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கைகோக்கவுள்ளது. சந்திரசேகர் ராவுக்கு எதிராக மாணவர் அமைப்புகளையும் இதர சமூக அமைப்புகளையும் ஒன்றுதிரட்டுவோம். கூட்டணி தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com