தெலங்கானா: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 57 பேர் பலி

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 57 பேர் உயிரிழந்தனர். 
தெலங்கானா மாநிலம், ஷனிவராபெட் கிராமத்துக்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் சிக்கியிருப்போரை மீட்கும் குழுவினர்.
தெலங்கானா மாநிலம், ஷனிவராபெட் கிராமத்துக்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் சிக்கியிருப்போரை மீட்கும் குழுவினர்.


தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 57 பேர் உயிரிழந்தனர். 
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று, 60 - 65 பயணிகளுடன் கொன்டகாட்டுவில் இருந்து ஜக்தியாலுக்கு வந்துகொண்டிருந்தது. நண்பகலில் ஷனிவராபெட் கிராமத்துக்கு அருகே வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையிலிருந்து விலகி, அதையொட்டிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. வேகத்தடை ஒன்றில் ஏறியிறக்கும்போது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் ஸ்ரீநிவாஸ்(51) மற்றும் 36 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 57 பேர் உயிரிழந்தனர். 24-க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிரிழந்தவர்களில் 31 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. 
விபத்தில் காயமடைந்தவர்கள் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கும், அருகே உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் ஜக்தியால் மாவட்ட ஆட்சியர் ஏ. சரத் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார் என்று காவல்துறையினர் கூறினர்.
முதல்வர் நிவாரணம்: இதனிடையே, இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தெலங்கானா நிதி மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் எடலா ராஜேந்தர், நிஜாமாபாத் எம்.பி. கவிதா, காங்கிரஸ் பேரவைத் தலைவர் கே. ஜனா ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: விபத்து குறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், தெலங்கானாவில் நடந்த பேருந்து விபத்து என்னை பேச முடியாத படி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தனை பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையாய் இருக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையே சூழ்ந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com