நிர்பயா' வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம்: திகார் சிறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்

தில்லியில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத்
நிர்பயா' வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம்: திகார் சிறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்

தில்லியில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் திகார் சிறைக்கு விளக்கம் கேட்டு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2012, டிசம்பர் 15-ஆம் தேதி தில்லியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த 23 வயது துணை மருத்துவ மாணவி, கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். 
பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் 6 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அதில் ஒருவர் சிறார் வயதுப் பிரிவின்கீழ் இருந்தார். இதனால், அவரது வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
இதையடுத்து, நிர்பயா பாலியல், கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரின் தூக்குத் தண்டனையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தச் சம்பவத்தை மிகவும் மிருகத்தனமான, காட்டுமிராண்டித்தனமான, துயரம் மிகுந்த தாக்குதல் என நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்திருந்தது. 
இந்த உத்தரவைத் தொடர்ந்து, குற்றவாளிகளில் மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நீடிப்பதாக தில்லி மகளிர் ஆணையத்தில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி மனு அளித்தார். 
இதையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் நிலவுவது தொடர்பாக விளக்கம் கேட்டு திகார் சிறை நிர்வாகத்திற்கு தில்லி மகளிர் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், சமூகத்தில் வலுவான பயத்தை உருவாக்கும் வகையில் விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனது மகளைக் கொன்றவர்களைக் தூக்கிலிட்டால்தான் நீதி கிடைத்ததாக இருக்கும். 
குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி மகளிர் ஆணையத்தை அணுகினேன். அதன் பின்னர், கடந்த ஜூலையிலும் மீண்டும் அணுகினேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com