மாநிலங்களவை, சட்டமேலவை தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டுகளில் இருந்து நோட்டா நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமேலவைகளுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகளில் இருந்து நோட்டா-வை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.


மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமேலவைகளுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகளில் இருந்து நோட்டா-வை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, இந்நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா உபாயத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
அப்போது நீதிபதிகள், தேர்தலில் தனிநபர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கவே நோட்டா வாய்ப்பு அளிக்கப்பட்டது, அப்படியிருக்கையில் மாநிலங்களவைத் தேர்தலில் இதை அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது? என்று தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வியெழுப்பினர். மாநிலங்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டில் நோட்டாவுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், மாநிலங்களவை, சட்டமேலவைத் தேர்தல்கள் ஆகியவற்றில் நோட்டாவை இனிமேல் பயன்படுத்தக் கூடாது. இன்று முதல் மாநிலங்களவை, சட்டமேலவை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகளில் நோட்டா சின்னம் அச்சடிக்கப்படக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களில் நோட்டா தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com