36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் அரசின் முடிவு சரியே: விமானப் படை தலைமைத் தளபதி

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசின் முடிவு சரியானதுதான் என்று விமானப் படைதலைமைத் தளபதி
36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் அரசின் முடிவு சரியே: விமானப் படை தலைமைத் தளபதி


பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசின் முடிவு சரியானதுதான் என்று விமானப் படைதலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், அது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் இறுதிசெய்யப்படவில்லை.
பின்னர் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவிடம் ஒப்படைக்கத் தொடங்கும்.
இதனிடையே, இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. 126 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய வேண்டிய இடத்தில் 36 போர் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? அந்த விமானங்களுக்கு 3 மடங்கு விலை கொடுப்பது ஏன்? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விமானப் படை மறுசீரமைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பி.எஸ்.தனோவா, 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் மத்திய அரசின் முடிவு சரியானதே என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
விமானப் படையில், ஒரு படைப் பிரிவுக்கு 16 முதல் 18 போர் விமானங்கள் வரை தேவைப்படும். அதன்படியே, அவசரத் தேவைக்காக, பிரான்ஸிடம் இருந்து 2 படைப் பிரிவுகளுக்குத் தேவையான அளவில் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் கூட விமானப் படையில் போர் விமானங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது, அவசர தேவைக்காக, இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் நடைபெற்றுள்ளது.
போர் விமானங்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த 1983-ஆம் ஆண்டு எஃப்-16 போர் விமானங்களை பாகிஸ்தான் அரசு கொள்முதல் செய்தது. அதையடுத்து, இரண்டு படைப் பிரிவுகளுக்கு தேவையான அளவில் மிக்-23 எம்.எஃப். ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிரான்ஸிடம் இருந்து கடந்த 1985-ஆம் ஆண்டில் மிரேஜ்-2000 ரக போர் விமானங்களும், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து மிக்-29 ரக போர் விமானங்களும் கொள்முதல் செய்யப்பட்டன.
விமானப் படையில், 42 படைப் பிரிவுகளுக்குத் தேவையான போர் விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 31 படைப் பிரிவு விமானங்களே உள்ளன. இந்நிலையில், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரண்டு அண்டை நாடுகளிடமும் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, நமது விமானப் படைக்குத் தேவையான விமானங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது.
இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை. சீனா போன்ற அண்டை நாடுகள், தங்களது விமானப் படை ஆயுதங்களை நவீனப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதை ஈடு செய்யும் அளவில், இந்திய விமானப் படையை வலிமைப்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com