சித்துவுக்கு எதிராக 30 ஆண்டுகள் பழைமையான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு மறுஆய்வு: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்துவுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச


பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்துவுக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
பாட்டியாலாவில் கடந்த 1988ஆம் ஆண்டு நடுரோட்டில் தங்களது காரை சித்துவும், ரூபிந்தர் சிங் சாந்துவும் நிறுத்தியிருந்தனர். அப்போது ஜஸ்வீந்தர் சிங் உள்ளிட்ட 3 பேர், வங்கிக்கு பணம் எடுப்பதற்காக அந்த வழியே காரில் சென்றனர்.
நடுரோட்டில் சித்துவின் கார் நிற்பதை பார்த்த அவர்கள், சித்துவையும், சாந்துவையும் காரை அப்புறப்படுத்தும்படி வலியுறுத்தினர். இதனால் நேரிட்ட தகராறில் ஜஸ்வீந்தர் சிங் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் சித்து, சாந்து ஆகியோர் கடந்த 1999ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
எனினும், மேல்முறையீடு மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை கடந்த 2006ஆம் ஆண்டு ரத்து செய்தது. சித்து, சாந்து ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சித்து, சாந்து ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இதை கடந்த மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதேநேரத்தில், சித்துவுக்கு ரூ.1,000 அபராதம் மட்டும் விதித்து தீர்ப்பளித்தது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ரூபிந்தர் சிங் சாந்துவையும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜஸ்வீந்தர் சிங்கின் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், சஞ்சய் கிஷான் கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வால் புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டது.
அப்போது ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். நவ்ஜோத் சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com