ராணுவத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல்: காங்கிரஸ் எதிர்ப்பு

இந்திய ராணுவத்தில் 1 லட்சம் வீரர்களை குறைப்பது உள்ளிட்ட மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தலைமையிலான குழு கொள்கை அளவில் ஒப்புதல்


இந்திய ராணுவத்தில் 1 லட்சம் வீரர்களை குறைப்பது உள்ளிட்ட மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தலைமையிலான குழு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தில்லியில் இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தலைமையில் ராணுவ உயரதிகாரிகள் கூட்டம் 2 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: ராணுவத்தின் பல்வேறு கட்டமைப்புகளை சீரமைப்பு செய்வது, தேவைப்பட்டால் வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது, விரைந்து தாக்குதல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவாக, தளவாட கொள்முதலை மாற்றுவது ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவ தளபதிகளின் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கப்படும்.
குறிப்பாக, ராணுவ நடவடிக்கைகள் பிரிவு, தளவாட கொள்முதல் பிரிவு ஆகியவற்றில் முக்கிய சீர்திருத்தம் செய்யப்படவுள்ளது. தில்லியில் ராணுவ தலைமையகத்தில் இருக்கும் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவின் டைரக்டரேட் ஜெனரல் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. இந்திய ராணுவ பயிற்சி டைரக்டரேட் ஜெனரல் அலுவலகம், ஷிம்லாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவ பயிற்சி கமாண்ட் அலுவலகத்துடன் இணைக்கப்படவுள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கையில், 1 லட்சம் வரை குறைக்க வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் எதிர்ப்பு: இதனிடையே, தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தேச பாதுகாப்பு விவகாரத்தில் மோடி அரசு சமரசம் செய்கிறது. வேலையில்லா பிரச்னை மீது தங்களுக்கு அக்கறையில்லை என்பதையும் மோடி அரசு வெளிப்படுத்தியுள்ளது. 1.5 லட்சம் வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் உண்மையெனில், அதனால் 1.5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். புதிதாக ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி வாக்குறுதியளித்தார். அதற்குப் பதிலாக, அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அழித்து வருகிறார். இது ஏன்?
பிரதமர் நரேந்திர மோடியின் சுயவிளம்பரத்துக்காக கடந்த 4.5 ஆண்டுகளில் அரசு ரூ.5,000 கோடி செலவிட்டுள்ளது. இப்படியிருக்கும்போது, பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்களை வாங்க இதே தொகையை ஏன் செலவிட முடியாது? இதுகுறித்து மோடி அரசு பதிலளிக்க வேண்டும்.
தனது உடல்பயிற்சி விடியோவுக்கு ரூ.35 லட்சம் மோடி செலவிடுகிறார். பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் தனது படங்களை மாற்ற ரூ.60 கோடி செலவிடுகிறார். பாஜக தலைமையகத்தை புதுப்பிக்க ரூ.1,100 கோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.2,000 கோடி செலவிடுகிறார். அப்படியிருக்கையில், ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்க ஏன் போதிய தொகையை மோடி அரசு வழங்கவில்லை?
பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்புகளால் அரசுக்கு ரூ.11 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அதிலிருந்து ரூ.5,000-ரூ.7,000 கோடியை ஏன் இந்திய ராணுவத்துக்கு செலவிடவில்லை? என்றார் அபிஷேக் சிங்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com