2025-க்குள், இருவழி முதலீட்டை ஆண்டுக்கு 3.5 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் - இந்தியா, ரஷியா இலக்கு

2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷியாவும் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்துள்ளது.
2025-க்குள், இருவழி முதலீட்டை ஆண்டுக்கு 3.5 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் - இந்தியா, ரஷியா இலக்கு

2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷியாவும் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்துள்ளது. 

இந்தியா, ரஷியா நாடுகளுக்கிடையிலான வருடாந்திர உச்சி மாநாடு தில்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அப்போது, பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்புக்கு அடித்தளமாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ரஷிய துணைப் பிரதமர் யுரி போரிஸோவ் ஆகியோருக்கிடையிலான இந்த சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், 

"இந்தியா, ரஷியாவுக்கு இடையிலான வர்த்தகம் 2017-இல் 71, 000 கோடியை எட்டியது. இந்த வர்த்தகத்தில் இருக்கும் இடையூறுகளை நீக்கி நிலையான வர்த்தகத்தை உறுதிப்படுத்தவும், தற்போதைய வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இருவழி முதலீட்டை 2025-ஆம் ஆண்டுக்குள் 2.15 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த இலக்கு தற்போதே அதை கடந்துவிட்டது. அதனால், 2025-க்குள் இந்த முதலீட்டை 3.5 லட்சம் கோடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். 

இந்த உறவின் புதிய கோணமாக 3-ஆவது நாடுகளில் செயல்படுத்தும் திட்டங்களில் இந்தியாவும், ரஷியாவும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்தியா - ரஷியா இடையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சியை காட்டுகிறது. அதனால், விசா கட்டுப்பாடுகளை சற்று தளர்த்திக்கொள்ளும் நடவடிக்கைகளை இருநாடுகளும் மேற்கொண்டு வருகிறது. 

ரஷியாவுக்கு செல்லும் இந்திய மக்களுக்கு மின் விசாக்களை வழங்குவதற்கு ரஷிய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷியாவில் இருந்து முதன்முதலாக கப்பல் மூலம் இயற்கை எரிவாயு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இருநாடுகளுக்கிடையிலான உறவில் இது புதிய உச்சம். 

இருநாடுகளுக்கிடையிலான அடுத்தகட்ட ஒத்துழைப்புக்காக வேளாண், கட்டமைப்பு, போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில், இருநாடுகளில் உள்ள முக்கிய தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய முதல் இந்திய-ரஷிய வர்த்தக உச்சி மாநாட்டை நடத்த இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com