உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கோகோய்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இதற்கான ஒப்புதலை
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கோகோய்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்


உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்.3-இல் பதவியேற்பு: இதையடுத்து, வரும் அக்டோபர் 3-ஆம் தேதியன்று 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் முறைப்படி பதவியேற்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வரை அப்பதவியில் அவர் நீடிப்பார். 
முக்கிய தீர்ப்புகள்: பல்வேறு சிக்கலான வழக்குகளுக்கு தீர்வு கண்டவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டது; கேரளத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது; உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் அரசு இல்லங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது என பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் ரஞ்சன் கோகோய். இவை மட்டுமன்றி, தேசிய அளவில் கவனம் பெற்ற அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டு சர்ச்சை தொடர்பான வழக்கையும் அவரது தலைமையிலான அமர்வே விசாரித்து வருகிறது.
கடந்த 1954-ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்த ரஞ்சன் கோகோய் , சட்டப் படிப்புகளை நிறைவு செய்த பிறகு முறைப்படி பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார். அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் கேசவ் சந்திர கோகோய் மகனான அவர் 1978-ஆம் ஆண்டில் முதன்முதலாக நீதிமன்றத்தில் வாதாடத் தொடங்கினார். வரிவிதிப்பு, கம்பெனி விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் அவர் அதிக அளவில் ஆஜரானார்.
அதன் தொடர்ச்சியாக, குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், பல்வேறு வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வில் இடம்பெற்று விசாரணை நடத்தியுள்ளார்.
சர்ச்சை: தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுகளிலும் ரஞ்சன் கோகோய் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நீதிபதிகள் செலமேஸ்வர், மதன் பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த கோகோய், தலைமை நீதிபதி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். வழக்குகளை பாரபட்சமாக ஒதுக்குகிறார் என்பது தீபக் மிஸ்ரா மீது அவர்கள் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டு. அதன் பின்னர், அவர்களில் எந்த நீதிபதியுமே தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில், அக்டோபர் 2-ஆம் தேதியுடன் தீபக் மிஸ்ரா ஓய்வுபெற உள்ளதால், அடுத்த தலைமை நீதிபதியை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விதிகளின்படி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர்தான் தலைமை நீதிபதி பொறுப்புக்கு வர முடியும். அந்த வகையில், தீபக் மிஸ்ராவுக்கு பிறகு ரஞ்சன் கோகோய்தான் மூத்த நீதிபதியாக உள்ளார். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், கோகோயை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க தீபக் மிஸ்ரா பரிந்துரைப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலாக வேறு நீதிபதியை அவர் முன்மொழியலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த கருத்துகளைப் பொய்யாக்கும் விதமாக ரஞ்சன் கோகோயின் பெயரையே தீபக் மிஸ்ரா பரிந்துரைத்தார். அது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த, ராம்நாத் கோவிந்த், அதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்கூட்டியே தகவல் வெளியிட்ட பிரதமர் அலுவலகம்!
பொதுவாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிக்கப்படும்போது அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிடப்படுவதுதான் வழக்கம். அதன் பிறகே பிரதமர் அலுவலகம் சார்பில் தகவல்கள் வெளியாகும்.
ஆனால், ரஞ்சன் கோகோய் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம், முன்கூட்டியே அதுகுறித்த விவரங்களை தெரிவித்துவிட்டது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கேட்டபோது, அதனை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மிகவும் துரிதமாக அறிவிப்பை வெளியிட்டதால் வழக்கமான நடைமுறைக்கு மாறாக இது அமைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com