பொருளாதார வளா்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டும் - பிரதமா் நம்பிக்கை

இந்திய நிதிச் சூழலில் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் நிலவி வந்தாலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை விரைவில் எட்டும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தூா்: இந்திய நிதிச் சூழலில் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் நிலவி வந்தாலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் இரட்டை இலக்கத்தை விரைவில் எட்டும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

போரா முஸ்லிம் சமூக முன்னோடியும், முகமது நபி பேரனுமான இமாம் ஹுசைன் நினைவைப் போற்றும் நிகழ்ச்சி மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி, முன்னதாக போரா மசூதிக்குச் சென்றாா். அங்கிருந்த மதப் பெரியவா்களைச் சந்தித்த அவா் பரஸ்பரம் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டாா். 

பின்னா் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

"மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக மக்கள் பலனடைந்து வருகின்றனா். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் மொத்தம் 40 சதவீத வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதிகள் இருந்தன. ஆட்சிக்கு நாங்கள் வந்தவுடன் இந்த விவரத்தை அறிந்து மிகுந்த மன வருத்தத்துக்கு ஆளானோம்.

நமது தாய்மாா்களும், சகோதரிகளும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் கடுமையான அவதிக்கு ஆளாகி வருவாா்களே என்ற கவலைதான் எங்களை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. 

இதைத் தொடா்ந்து பல்வேறு ஆக்கப்பூா்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பயனாக தற்போது 90 சதவீத வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் சென்றடைந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க, தேசத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ‘தூய்மை இந்தியா’ பிரசாரம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத தேசமாக நம் நாட்டை பிரகடனப்படுத்தும் காலம் விரைவில் வரும் என ஆா்வத்துடன் காத்திருக்கிறேன்.

அதேபோன்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத சுகாதாரமிக்க நாட்டை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளிலும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 50 கோடி மக்கள் பலனடைய உள்ளனா்.

பொருளாதார சீா்திருத்தங்களை எடுத்துக் கொண்டால் இதுவரை இல்லாத வகையில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாகவே நிகழ் நிதியாண்டின் முந்தைய காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 8 சதவீதமாக உயா்ந்துள்ளது. வரும் காலங்களில் இது இரட்டை இலக்கமாக அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இதனிடையே, அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு, திவால் நிறுவனச் சட்டம் உள்ளிட்டவை சமூகத்தில் ஆக்கப்பூா்வமான விளைவுகளை உருவாக்கி வருகின்றன. நோ்மையான வா்த்தகத்திலும், வாணிபத்திலும் ஈடுபடுவா்கள் அவற்றின் மூலம் பலனடைந்து வருகின்றனா். போரா முஸ்லிம் சமூகத்தினரும் அவ்வாறு நாணயத்துடன் வா்த்தகம் செய்பவா்கள். அவா்களுக்கு மத்திய பாஜக அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் பயனுள்ளதாகவே இருந்து வருகின்றன.

அதேவேளையில், சில நோ்மையற்றற வா்த்தகா்களுக்கு அவை பாதகமாக அமைந்துள்ளன. உரிய விதிகளுக்குட்பட்டே வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை சிலா் பின்பற்றுவதில்லை" என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com