மல்லையா தப்பிச் செல்ல ஜேட்லி உடந்தை: ராகுல்

பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய
மல்லையா தப்பிச் செல்ல ஜேட்லி உடந்தை: ராகுல்

ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தல்​

பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடந்தையாக இருந்தார் என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது:
விஜய் மல்லையாவை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல அருண் ஜேட்லி அனுமதித்தது ஏன்? ஒருவேளை அவரை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டாரா?
வெளிநாட்டுக்கு மல்லையா தப்பிச் செல்வது குறித்த தகவல் முன்கூட்டியே தெரிந்தும் விசாரணை அமைப்புகளுக்கு அவர் தெரியப்படுத்தாதது ஏன்?
குற்றவாளி விஜய் மல்லையாவுடன் அருண் ஜேட்லிக்கு தொடர்பிருக்கிறது. அருண் ஜேட்லியை விஜய் மல்லையா 2016-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சந்தித்துப் பேசியதாக காங்கிரஸ் எம்.பி.யான பி.எல்.புனியா கூறுகிறார்.
அன்றைய தினத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இது நிச்சயம் பதிவாகியிருக்கும். அந்த விடியோவை ஆய்வு செய்ய ஜேட்லி தயாரா?
ஜேட்லியை சந்தித்தபோது, நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்று குற்றவாளி மல்லையாக கூறியிருக்கிறார். ஆனால், தற்போது உண்மையை மறைக்க ஜேட்லி பொய் சொல்கிறார். ரஃபேல் மற்றும் மல்லையா விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது.
மல்லையா, நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் ஜேட்லி தடுத்து நிறுத்தாது ஏன்? ஜேட்லி, அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜேட்லிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரக் கோரி மனு அளிக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்சியால் என்ன முடியுமோ அதை செய்யும்' என்று பதிலளித்த ராகுல், மல்லையாவை லண்டனுக்கு தப்பிச் செல்ல அனுமதித்தது ஏன்? என்று ஜேட்லி முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எல்.புனியா கூறியதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜேட்லியுடன் மல்லையா பேசிக் கொண்டிருந்தை கண்டேன். அவர் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தார். அதற்கு மறுநாள் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கிறார். அவர் தப்பியோடிவிட்டார் என்ற செய்தி மார்ச் 3-ஆம் தேதி ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. நான் இந்தத் தகவலை பேட்டியின்போது பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். நான் குறிப்பிட்டுள்ள தினங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மை தெரியவரும். ஒரு வேளை நான் கூறியது தவறாக இருந்தால், அரசியலை விட்டுச் செல்ல தயாராக இருக்கிறேன் என்றார் புனியா.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்த கோரும் வழக்கு நடைபெற்று வருகிறது.
மும்பை ஆர்தர் ரோடு சிறையில் போதிய வசதி இல்லை என்று மல்லையாவின் வழக்குரைஞர் சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. அந்தச் சிறையில் போதிய வசதிகள் இருப்பதாக விடியோ ஒன்றை சிபிஐ வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதுதொடர்பான விசாரணைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜராக வந்த மல்லையா, செய்தியாளர்களிடம் இந்தியாவிலிருந்து வெளியேறும் முன்பு அருண் ஜேட்லியை சந்தித்தேன் என்று தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவர் கூறியதை ஜேட்லி மறுத்தார்.
அதன் பின்னர், ஜேட்லியுடன் நடைபெற்ற சந்திப்பு அதிகாரப்பூர்வமற்றது. இதை சர்ச்சையாக்க வேண்டாம்' என்றார் மல்லையா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com