செர்பியா அதிபருடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை

செர்பியா அதிபருடன் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 
செர்பியா அதிபருடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை

செர்பியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அந்நாட்டு அதிபருடன் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். 

மத்திய ஐரோப்பியாவில் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு முதல் நாடாக வெள்ளிக்கிழமை செர்பியாவுக்கு சென்றார். இந்த பயணத்தின் போது வெங்கய்ய நாயுடு, செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வூசிக்கை இன்று சந்தித்தார். அப்போது இந்தியா, செர்பியாவுக்கு இடையே தாவர பாதுகாப்பு மற்றும் விமானச் சேவைகள் குறித்தான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பொருளாதாரம், பயங்கரவாதத்துக்கு எதிராக கைகோர்த்தல் மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட துறைகளையும் விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டது. 

இந்த சந்திப்புக்குப் பிறகு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், 

"செர்பிய அதிபருடன் இருநாடுகளுக்கிடையிலான உறவின் முக்கிய அம்சங்கள், உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. நீண்ட நாட்களாக இருக்கும் இந்த நட்புறவை மேலும் மேம்படுத்துவது தொடர்பான செயல்பாடுகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். 

இருதரப்பு மக்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்ந்து இந்தியாவும், செர்பியாவும் பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. 

இருநாடுகளுக்கிடையிலான வளமான உறவை உணர்த்தும் வகையில், இந்திய - செர்பிய தொழில்முனைவோர்கள் வெற்றிக் கூட்டணியாக மாறி செயல்பட பல துறைகளில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

இந்தியா, செர்பியா இடையில் கையெழுத்தாகியுள்ள தாவர பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம், விவசாய பொருட்கள் வர்த்தகம் அதிகரிக்கும். விமானச் சேவை ஒப்பந்தம், சுற்றுலாத் துறையையும், வர்த்தகத்தையும் ஊக்குவிக்கும். 

இருநாடுகளுக்கிடையிலான மக்கள் உறவுகள் மற்றும் வளர்ந்து வரும் கலாச்சார ஒத்துழைப்புகள் குறித்தான திருப்தியை நாங்கள் வெளிப்படுத்திக்கொண்டோம். செர்பியாவுக்கு குறைந்த நாட்களுக்கு மட்டுமே பயணிக்க வரும் இந்தியர்களுக்கு விசா வழங்க செர்பியாவே தனிச்சையாக முடிவெடுத்தமைக்கு அதிபருக்கு நன்றி தெரிவித்தேன். செர்பிய குடிமக்களுக்கு மின்-விசா வசதிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இது சுற்றுலா மற்றும் மக்களின் உறவுகளை மேலும் மேம்படுத்தும்" என்றார்.

இந்த தருணத்தை கொண்டாடும் வகையில், இந்தியா மற்றும் செர்பியா தபால் துறை இணைந்து, செர்பியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரது நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com