இந்திய கடலோரக் காவல் படையில் புதிய ரோந்துக் கப்பல் ஐ.சி.ஜி.எஸ். விஜயா'

சென்னைக்கு அருகே அமைந்துள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கட்டப்பட்ட ஐ.சி.ஜி.எஸ். விஜயா' என்ற அதிநவீன புதிய ரோந்துக் கப்பலை சென்னையில்
இந்திய கடலோரக் காவல் படையில் புதிய ரோந்துக் கப்பல் ஐ.சி.ஜி.எஸ். விஜயா'


சென்னைக்கு அருகே அமைந்துள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கட்டப்பட்ட ஐ.சி.ஜி.எஸ். விஜயா' என்ற அதிநவீன புதிய ரோந்துக் கப்பலை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
எல் அண்ட் டி வடிவமைத்து கட்டிய முதல் ரோந்துக் கப்பல் 'விக்ரம்' கடந்த ஏப்ரல் 11-ம் தேதி கடலோரக் காவல் பணியில் இணைக்கப்பட்டது. இரண்டாவது ரோந்துக் கப்பலான விஜயா' கடந்த ஜன.20-ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு தளவாடங்கள், தொலைதொடர்பு கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. 2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் அதிகபட்சம் 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. 
நாட்டுக்கு அர்ப்பணிப்பு: ஐ.சி.ஜி.எஸ். விஜயா' கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது இக்கப்பல் கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டதற்கான சான்றிதழை அதன் கேப்டன் ஹரிந்தர் ஜித் சிங்கிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து கப்பலின் பெயர் பலகையைத் திறந்து வைத்தார். 
பாரதீப் செல்லும் ஐ.சி.ஜி.எஸ். விஜயா': இக்கப்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் ராஜேந்திர சிங் கூறியது:
இந்திய கடலோரக் காவல்படையில் தற்போது 137 ரோந்து கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள் மற்றும் 62 ரோந்து விமானங்கள் உள்ளன. 
மேலும் 62 புதிய ரோந்துக் கப்பல்கள், படகுகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை சுமார் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கப்பலின் இயந்திரம் ஜெர்மனி நாட்டிலிருந்தும், புரப்பல்லர் நெதர்லாந்து நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை.
இக்கப்பல் பல்வேறு அதி நவீன கண்காணிப்பு, தொலை தொடர்பு, ஆயுதங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோந்துப் பணியில் கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள இயலும். 
கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட இக்கப்பல் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒடிசா முதல் மேற்கு வங்கம் வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் வகையில் பாரதீப்பில் உள்ள கடலோரக் காவல்படை மையத்தை தலைமையிடமாகக் கொண்டு பணியில் ஈடுபடும் என்றார் ராஜேந்திர சிங். 
கிழக்கு பிராந்திய தளபதி பி.சிவமணி, எல் அண்டி டி நிறுவன இயக்குநர் ஜே.என்.பாட்டில், கப்பல் கட்டும் தள மேலாண்மை இயக்குநர் கண்ணன், பொது மேலாளர் விஸ்வநாதன் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com