25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம்: அருண் ஜேட்லி பெருமிதம்

நாட்டிலுள்ள 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு அளிக்கப்பட்டதன் மூலம், அவர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக
25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம்: அருண் ஜேட்லி பெருமிதம்

நாட்டிலுள்ள 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு அளிக்கப்பட்டதன் மூலம், அவர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து "மத்திய அரசின் இரண்டு வெற்றிகரமான திட்டங்கள்' என்ற தலைப்பில், சனிக்கிழமை முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
 கடந்த காலங்களில், அரசுத் திட்டங்கள் மீது மக்களிடம் பொதுவாக அவநம்பிக்கையே காணப்பட்டது. ஏனெனில், அந்தத் திட்டங்களின் பயன்கள் தகுதியான மக்களைச் சென்று அடையாததும், திட்டங்களே சரியான முறையில் செயல்படுத்தப்படாததும், அதன் குறைகளாக இருந்தன. இப்படியிருந்த சூழ்நிலையில், தற்போதைய அரசின் திட்டங்கள் மிகப் பெரிய அளவில் மக்களைச் சென்றடைந்து வருகின்றன.
 தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. அங்கன்வாடி பணியாளர்களும், அவர்களின் உதவியாளர்களும் நீண்ட காலமாக நியாயமான ஊக்கத்தொகை உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த கால அரசுகள் நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டன.
 ஆனால், பாஜக தலைமையிலான அரசு, நிதிச் சுமை இருந்தபோதிலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு 50 சதவீதம் ஊக்கத்தொகை உயர்வு வழங்கியுள்ளது. இது அவர்களுக்கு நீண்ட காலத்துக்குப் பயனளிக்கும். இந்த ஊக்கத்தொகை உயர்வின் மூலம், ஏறத்தாழ 12.9 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களும், 11.6 லட்சம் அங்கன்வாடி உதவியாளர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பயனடைவர்.
 மத்திய அரசின் திட்டங்களுள் மிக முக்கியமானது "தூய்மை இந்தியா' திட்டம். இத்திட்டத்தைக் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த போது, கிராமப் பகுதிகளின் சுகாதார அளவு 39 சதவீதமாக இருந்தது. ஆனால், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, அதுவே 92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மிக எளிதாக அடையக்கூடிய இலக்கு இல்லை. நாட்டு மக்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றமே இத்திட்டத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.
 "2019-ஆம் ஆண்டு காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள் விழாவுக்குள், இந்தியாவை "திறந்தவெளி மலம் கழித்தல்' இல்லா நாடாக மாற்ற வேண்டும்' என்று பிரதமர் இலக்கு நிர்ணயித்தார். இது அடையமுடியாத இலக்கு என்றே பெரும்பாலானோர் கருதினர். ஆனால், இத்திட்டம் அரசின் திட்டமாக இல்லாமல், மக்களின் திட்டமாக மாறியது. இப்போது, பெண்களின் திட்டமாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், கிராமப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து அவர்களுக்கு நீண்ட கால பயனை அளிக்க உள்ளது. முக்கியமாகப் பெண்களின் வாழ்க்கைத்தரம் இத்திட்டத்தின் மூலம் மேம்பட்டுள்ளது.
 கிராமப் பகுதிகளில் மின்சாரம், சாலை வசதிகள், வீடு கட்டுதல், கழிவறைகள் கட்டுதல், சமையல் எரிவாயு இணைப்பு, குறைந்த விலையில் உணவுப்பொருள்கள் ஆகியவற்றின் மூலம் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இத்துடன் மக்களின் மருத்துவச் செலவைக் குறைத்து, அவர்களுக்கான மருத்துவ வசதியை மேம்படுத்த உள்ள "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் மூலம், மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேம்படும் என்று ஜேட்லி பதிவிட்டிருந்தார்.
 அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி, ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டவர்களுக்கு, இனி ரூ. 4,500 வழங்கப்படவுள்ளது. ரூ. 2,200 பெறுபவர்களுக்கு, இனி ரூ. 3, 500 வழங்கப்படும்.
 அங்கன்வாடியில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ. 2,500 ஆக ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை ரூ. 250 முதல் ரூ. 500 வரை வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com