எஸ்சி, எஸ்டி சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஹிந்து மகாசபை போராட்டம்

எஸ்சி,எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியல் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மீது அகில இந்திய ஹிந்து மகாசபை குற்றம் சாட்டியுள்ளது

எஸ்சி,எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வாக்கு வங்கி அரசியல் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மீது அகில இந்திய ஹிந்து மகாசபை குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு பிரதமருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளது.
 அந்த கடிதத்தில் ஹிந்து மகாசபை செயலர் பூஜா ஷகுண் பாண்டே கூறியிருப்பதாவது:
 எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கொண்டு வந்த திருத்தங்களை திரும்பப் பெறா விட்டால் என்னைக் கருணைக் கொலை செய்வதற்கு பிரதமர் அனுமதி வழங்க வேண்டும். இந்த கடிதத்தில் என்னோடு சேர்த்து 14 ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சட்டத் திருத்தம் தவறாக பயன்படுத்தப்படுமோ என்று உயர் சமூகத்தினர் அச்சத்தில் உள்ளனர். இந்த திருத்தம் சமூகத்தில் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும் என்று அந்த கடிதத்தில் பூஜா ஷகுண் பாண்டே குறிப்பிட்டிருந்தார்.
 முன்னதாக, இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக, செப்டம்பர் 10-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு உயர் சமூகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
 எஸ்சி, எஸ்டி சமூகத்தினரை அவமானப்படுத்தும் வகையில் யாரேனும் நடந்து கொண்டால் அவர்களை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யும் வகையில் எஸ்சி, எஸ்டி பாதுகாப்பு சட்டம் இருந்தது. இந்த விதியை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு எஸ்சி,எஸ்டி பாதுகாப்பு சட்டத்தை நீர்த்து போக செய்து விட்டதாக தலீத் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com