ஜேட்லியை மல்லையா சந்தித்த தகவலை வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன்? காங்கிரஸுக்கு சிவசேனை கேள்வி

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்து பேசியது

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்து பேசியது தொடர்பான தகவலை இத்தனை ஆண்டுகளாக வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை கேள்வியெழுப்பியுள்ளது.
 பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த மல்லையா, நாட்டை விட்டு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சரை சந்தித்ததாக தெரிவித்தார். மத்திய நிதியமைச்சரின் பெயரை அவர் வெளியிடாதபோதும், அக்காலக்கட்டத்தில் அருண் ஜேட்லிதான் மத்திய நிதியமைச்சராக இருந்தார் என்பதால், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
 அதேநேரத்தில் மல்லையாவை தாம் சந்திக்கவில்லை என்று ஜேட்லி மறுத்தார். இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் மல்லையாவும், ஜேட்லியும் சுமார் 20 நிமிடம் பேசியதாகவும், அதுதொடர்பான விடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி எம்.பி. புனியா அண்மையில் தெரிவித்தார். இதை பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனை விமர்சித்துள்ளது.
 இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 மல்லையா ஒரு பொய்யர். அவர் அளித்த பேட்டி அருண் ஜேட்லிக்கு தற்போது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் முன்பு, ஜேட்லியை சந்தித்து, கடன் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புவதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
 மல்லையாவின் பேட்டியை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தில் ஜேட்லியை குற்றவாளியாக்குவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது? ஆனால், இதைத்தான் காங்கிரஸ் செய்து வருகிறது. நாட்டில் வாராக்கடனால் தற்போது 16 வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 இந்த வங்கிகளில் கடன்கள் வாங்கியோர் அனைவரும் பெருமுதலாளிகள். அவர்களில் மல்லையாவும் அடங்குவார்.
 மல்லையாவின் கோரிக்கையை வங்கிகள் ஏற்கவில்லை. இதனாலேயே ஜேட்லியை அவர் சந்தித்துள்ளார். எம்.பி. என்ற முறையில் நாடாளுமன்றத்துக்கு செல்ல மல்லையாவுக்கு உரிமை உள்ளது. இப்படியிருக்கையில், இந்த வழக்கில் ஜேட்லி மீது காங்கிரஸ் எம்.பி. புனியா குற்றம்சாட்டுவது நகைப்புக்குரிய செயலாகும்.
 நாட்டை விட்டு வெளியேறிய வைர வியாபாரி நீரவ் மோடியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நீரவ் மோடி தப்பியோடிய விவகாரத்தில் ராகுல் காந்தி மீது குற்றம்சாட்ட முடியுமா? ஜேட்லியை மல்லையா சந்தித்து பேசியது குறித்த தகவல், பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸுக்கு தெரியும் என்றால், இத்தனை ஆண்டுகளாக அந்தத் தகவலை வெளியிடாமல் மௌனம் காத்தது ஏன்?
 மல்லையாவின் இந்தத் திடீர் பேட்டிக்கும், காங்கிரஸின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும் பின்னால் யாரும் உள்ளார்களா? 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆயத்தத்தின் ஒரு பகுதிதான் இது. தேவையில்லாதோர் நீக்கப்பட போகின்றனர். ஜேட்லிக்கு அதுதான் நடந்துள்ளது என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com