தூய்மை இந்தியா திட்டம் மூலம் காந்தியின் கனவை நிறைவேற்றுவோம்: பிரதமர் மோடி

தூய்மை இந்தியா தொடர்பாக மகாத்மா காந்தி கண்ட கனவை நாட்டு மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டம் மூலம் காந்தியின் கனவை நிறைவேற்றுவோம்: பிரதமர் மோடி

தூய்மை இந்தியா தொடர்பாக மகாத்மா காந்தி கண்ட கனவை நாட்டு மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
 மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும், கடந்த 2014ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் "தூய்மை இந்தியா' திட்டத்தை செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
 இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் ஆகும். இதேபோல், மத்திய பாஜக கூட்டணி அரசால் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் 4ஆவது ஆண்டு தினமாகும். இதை முன்னிட்டு, தூய்மை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மையே உண்மையான சேவை எனும் பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
 தில்லியில் இருந்து விடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நாட்டு மக்கள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது மோடி கூறியதாவது:
 தூய்மையே உண்மையான சேவை பிரசாரமானது, அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடரும். இந்த சேவையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். தூய்மை இந்தியா தொடர்பான மகாத்மா காந்தியின் கனவை நாட்டு மக்கள் நினைவாக்க வேண்டும்.
 இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் 40 சதவீதம் மட்டுமே கழிவறைகள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 90 சதவீதமாகியுள்ளது. 4 ஆண்டுகளில் 450 மாவட்டங்கள் அல்லது 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதிகளாக மாறும் என யாராவது நினைத்து பார்த்திருப்பீர்களா? இரு வாரம் நடைபெறவிருக்கும் இந்த பிரசாரத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.
 கழிவுகளை வளங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது. இதற்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்புகளை அளிக்க வேண்டும். இந்த பணியை அரசால் மட்டும் தனித்து மேற்கொள்ள முடியாது.
 தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மக்கள், வரும் காலத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் போல அனைவராலும் நினைவுகூரப்படுவர். மகாத்மா காந்தியின் உண்மையான வாரிசுகளாக அவர்கள் கருதப்படுவர். மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பதில் தூய்மை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் சுகாதார சீர்கேடுகளால் ஏற்படும் நோய்களால் நேரிடும் உயிரிழப்புகளில் இருந்து 3 லட்சம் பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாந்தி பேதியால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் 30 சதவீதம் குறைந்து விட்டதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது என்றார்.
 அஸ்ஸாம், கேரளம், தமிழகம், பிகார், கர்நாடகம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பாங்லாங் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள், ஆன்மீக குருக்கள் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிர்தானந்த மயி ஆகியோருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
 பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சாஹிப் குருத்வாரா தலைவர், அஜ்மீர் தர்கா நிர்வாகிகள் ஆகியோருடனும் பிரதமர் மோடி உரையாடினார்.
 உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் எனது அரசு கடந்த ஆண்டு அமைந்தது முதல் இதுவரை 1.5 கோடி புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் அனைவருக்கும் கழிவறை இருப்பதை உறுதி செய்யும் பணியில் எனது அரசு ஈடுபட்டுள்ளது' என்றார். இதைக் கேட்ட பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.
 இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் ஆகியோர் தூய்மையே உண்மையான சேவை பிரசாரத்தில் ஈடுபட்டனர். தெலங்கானாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், ஃபரீதாபாதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பாட்னாவில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் தூய்மையே உண்மையான சேவை பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
 தில்லி பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்திய மோடி
 தில்லி பஹரான்கஞ்ச் பகுதியில் உள்ள அம்பேத்கர் உயர் நிலைப்பள்ளிக்கு சென்று, அந்த பள்ளி வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி சுத்தப்படுத்தினார்.
 தூய்மையே உண்மையான சேவை திட்டத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, தில்லி பஹரான்கஞ்ச் பகுதியில் உள்ள அம்பேத்கர் உயர் நிலைப்பள்ளிக்கு சென்று, துடைப்பத்தால் பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தினார்.
 பள்ளி வளாகத்தில் கிடந்த தாள்களையும், பிளாஸ்டிக் கோப்பைகளையும் அவர் தனது கைகளால் எடுத்து அப்புறப்படுத்தினார். பின்னர் அந்த பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களுடன், தூய்மையின் அவசியம் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடவும் செய்தார். இதன்பின்னர் சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில், "தில்லி அம்பேத்கர் பள்ளியில் பயிலும் இளம் நண்பர்களுடன் ஆர்வத்துடன் சேர்ந்து தூய்மை சேவையில் ஈடுபட்டேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, அந்த பள்ளியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், "பிரதமர் மோடியின் பயணத்துக்காக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை; வழக்கமான போக்குவரத்து நிபந்தனைகளின்படியே பிரதமர் தனது பயணத்தை மேற்கொண்டார்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com