தேசம் வியத்தகு மாற்றத்தை சந்தித்து வருகிறது

"தேசம் வியத்தகு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது எடுக்கப்படும் முடிவுகளுக்கான பலன்கள் உடனடியாகக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் தாக்கம் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் எதிரொளிக்கும்'
தேசம் வியத்தகு மாற்றத்தை சந்தித்து வருகிறது

"தேசம் வியத்தகு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது எடுக்கப்படும் முடிவுகளுக்கான பலன்கள் உடனடியாகக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் தாக்கம் அடுத்து வரும் நூற்றாண்டுகளில் எதிரொளிக்கும்' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
 கர்நாடக மாநிலம், பெலகாவி கே.எல்.எஸ். சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வைர விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது:
 இளைஞர்களின் நோக்கங்களும், ஆர்வங்களும் வேகமாக மாற்றமடைந்து வருகின்றன. இளமையான, திறமையான மக்கள் தொகையை மட்டுமல்லாமல், வாய்ப்புகளை வழங்கக் கூடிய பொருளாதாரத்தையும் இந்தியா கொண்டுள்ளது. கடந்த காலாண்டில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது, நமது வளர்ச்சியின் வேகம் மற்றும் ஆற்றலை குறிக்கிறது.
 4-ஆவது தொழில்துறை புரட்சியை நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், நமது வாழ்கை முறை, பணிகள் மாற்றமடைவது போல, இளைஞர்களின் நோக்கமும், ஆர்வங்களும் மாற்றமடைகின்றன. புத்தாக்கம் மற்றும் நிபுணத்துவத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் மேம்பட வேண்டும். அதுதொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் அதற்கான பலன்கள் கிடைக்கும்.
 கர்நாடகம் மாநிலம், பெலகாவிக்கு நான் வருவது இது முதன்முறை என்றாலும், இந்த நகரம் கல்வி, மருத்துவத்தில் பெயர் பெற்று விளங்குவதை நானறிவேன். பெலகாவியின் பெயருக்கு மகுடம் சூட்டுவது போல கே.எல்.எஸ். சட்டப் பல்கலைக்கழகம் அமையப் பெற்றுள்ளது. அதன் வைர விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வழக்குரைஞர் பணியை தொழிலாக மட்டும் பார்க்காமல் உணர்வுப் பூர்வமாக அணுகவேண்டும். மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரும் வழக்குரைஞர்களாக பணியாற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர். அவர்களின் வழிகாட்டுதலை வழக்குரைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.
 உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குரைஞராக பணியாற்றி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்வு பெற்றுள்ளதை யாரும் மறந்துவிட முடியாது. அவரின் வழிகாட்டுதலை இளம் வழக்குரைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com