தேர்தலில் பண பலத்தைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை: தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தலின்போது கருப்புப் பணம் புழங்குவதைத் தடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும் என்றும் 
தேர்தலில் பண பலத்தைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை: தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தலின்போது கருப்புப் பணம் புழங்குவதைத் தடுப்பதற்கு தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
 நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் நிறைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 மேலும், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடங்களில் வெளியாகும் தவறான செய்திகளும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்த ஓ.பி.ராவத், இதுதொடர்பான விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் தேவை என்றார்.
 வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதும், விதிகளுக்குப் புறம்பாக வேட்பாளர்கள் செயல்படுவதும் அண்மைக்காலமாக சர்வ சாதாரண நிகழ்வாக உருமாறிவிட்ட நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ள இக்கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 தேர்தல் ஆணையம் சார்பில் தேசிய கருத்தரங்கம் ஒன்று தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் "இந்திய தேர்தல் ஜனநாயகம் எதிர்கொண்டு வரும் சவால்கள்' என்ற தலைப்பில் ராவத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
 ஜனநாயகக் கொள்கைகளைக் கொண்ட சர்வதேச நாடுகள் அனைத்திலும் தேர்தல் நடைமுறை சவால் நிறைந்ததுதான். அவை, சம்பந்தப்பட்ட நாடுகளில் நிலவும் சூழல்களைப் பொருத்து மாறுபடுமே ஒழிய மற்றபடி வேறு எந்த வேறுபாடும் இல்லை.
 பொதுவாகவே தேர்தல் என்பது வெறும் விருப்பங்களைச் சார்ந்ததாக இருக்க கூடாது. மாறாக, தகுதிகளின் அடிப்படையிலேயே அது இருக்க வேண்டும். அதாவது, ஒருவர் சரியில்லை என்பதற்காக வேறு வழியின்றி தகுதியற்ற மற்றொருவரைத் தேர்வு செய்யும் நிர்பந்தத்துக்கு ஆளாகக் கூடாது. எதிர்த்து போராடும் துணிவு, நல்ல குணாதிசியம், பொதுவாழ்வில் நேர்மை, பட்டறிவு ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்றவர்களை கண்டறியக் கூடிய நிலை உருவாக வேண்டும். அதுவே சிறந்த தேர்தல் ஜனநாயகம். தற்போது அத்தகைய சூழல் படிப்படியாக அழிந்து வருவதைத்தான் காண முடிகிறது.
 அரசியல் தலைவர்களுக்கும் சரி; வாக்காளர்களுக்கும் சரி, தேர்தல்தான் சட்ட பரிபாலனங்களின் ஆரம்பப்புள்ளி. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிலேயே முறைகேடுகள் அரங்கேறுமானால், நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மீதே மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.
 இந்தியாவை எடுத்துக் கொண்டால், பொதுத் தேர்தலாகட்டும்; மாநில பேரவைத் தேர்தல்களாகட்டும் பல சிக்கல்கள் நிறைந்துள்ளன. கருப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க அரசியல் கட்சிகளுக்கான பிரசார செலவை தேர்தல் ஆணையமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
 அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் நிதர்சனம். தற்போது உள்ள விதிகளின்படி தேர்தலில் பணப் பலத்தைத் தடுக்க இயலாது. சட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே அது சாத்தியம். அத்தகைய பரிந்துரைகளைத்தான் தேர்தல் ஆணையம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
 அமெரிக்க தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூலம் வாக்காளர்களின் தகவல்கள் திருடப்பட்டதைப் போல, இந்தியாவிலும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம் என அச்சம் எழுந்தது. அதைக் கருத்தில்கொண்டு இணையவழி பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. எனவே, தகவல் திருட்டு சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை.
 அதேவேளையில், ஊடகச் செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதரவாக வெளியிடப்படும் கையூட்டு செய்திகள், போலி செய்திகள் போன்றவை சமூகத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதுதொடர்பான புரிதல்களும், விழிப்புணர்வும் வாக்காளர்களுக்கு இருத்தல் அவசியம்.
 வெளிநாடுகளிலும் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஆனால், அந்நாட்டு ஊடகங்கள் ஒவ்வொரு வாரமும் அதற்கு முந்தைய தினங்களில் வெளியான போலி செய்திகளை வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த நடைமுறையை நம் நாட்டு ஊடகங்களும் பின்பற்ற வேண்டும்.
 வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருப்பதும், போலி வாக்காளர் பதிவுகளும் தேர்தல் ஆணையம் எதிர்கொண்டு வரும் மேலும் சில சவால்களாகும் என்றார் ஓ.பி.ராவத்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com