பாஜக ஆட்சியில் 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்: காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு

மத்திய பாஜக ஆட்சியில் 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சி புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக ஆட்சியில் 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சி புதிய குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
 தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி போன்ற தொழிலதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். இதிலிருந்து பொது மக்களின் வரிப்பணத்துக்கு காவலராக மத்திய அரசு செயல்படவில்லை என்பதும், வங்கிகளில் நிதி மோசடி செய்யும் நபர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் அமைப்பாக பாஜக செயல்படுவதும் நிரூபணமாக்கியுள்ளது.
 ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்களை இணையதளங்களில் சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நாட்டில் நிதி மோசடிகள் அதிகரித்து விட்டதாகவும், நாட்டை விட்டு தப்பியோடிய நிதி மோசடியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014-18ஆம் ஆண்டுகளில் 23 ஆயிரம் நிதி மோசடிகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக 4,639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016-17ஆம் ஆண்டில் 5,076 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017-18ஆம் ஆண்டில் 5,152 வழக்குகள் பதிவாகியுள்ளன. வங்கிகளில் மொத்தம் ரூ.90 ஆயிரம் கோடி மதிப்புக்கு நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளன. 2014-15ஆம் ஆண்டில் ரூ.19,455 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.18,698 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் ரூ.23,933 கோடியும், 2017-18ஆம் ஆண்டில் ரூ.25,459 கோடியும் மோசடிகள் நடைபெற்றுள்ளன.
 வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல், நாட்டை விட்டு 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பாஜக அரசால் அத்தகைய நபர்கள் யாரும் இதுவரை நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்படவில்லை.
 இதன்மூலம், பொது மக்களைக் காட்டிலும், மோசடியாளர்களுக்கு மத்திய அரசு விசுவாசமாக இருப்பது தெளிவாகிறது. நாட்டில் எளிதில் வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதும், அதன்பிறகு நாட்டை வெளியேறுவதும்தான் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
 23 நிதி மோசடியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு சென்ற விவகாரத்தில், மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆதலால், பிரதமர் நரேந்திர மோடியின் கண்காணிப்பின்கீழ் நாட்டைவிட்டு 23 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றது குறித்தும், பாஜகவுக்கும், அவர்களுக்கும் இடையே எத்தகைய தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்றார் அவர்.
 23 பேரின் பெயர்களையும் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com