பிகார் முன்னாள் முதல்வர் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பிகார் மாநிலம் மாதேப்புரா நகரிலுள்ள பிகார் முன்னாள் முதல்வர் பி.பி.மண்டல் இல்லத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளை போனதாக

பிகார் மாநிலம் மாதேப்புரா நகரிலுள்ள பிகார் முன்னாள் முதல்வர் பி.பி.மண்டல் இல்லத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளை போனதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
 முன்னாள் முதல்வர் மண்டலின் மகனும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான மணீந்திர குமார் மண்டல் கூறுகையில், தற்போது வசித்து வரும் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சொந்த கிராமமான மாதேப்புரா மாவட்டம் முர்ஹாவிற்கு சென்று விட்டனர். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்துடன் மடிக்கணினி, செல்லிடப்பேசி, உயர்ந்த ரக ஆடைகள் போன்ற பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து, சடார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
 மணீந்திர மண்டல் கொடுத்த புகாரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சஞ்சய் குமார் கூறுகையில், ''சம்பவ இடத்தில் சனிக்கிழமை காலை நேரில் விசாரணை நடத்தப்பட்டது. உயர்நிலைக்குழு அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நகர்ப்பகுதியில் உள்ள 26வது வார்டுக்குட்பட்ட தாப்ரா டோலா பகுதியில் 3 கொள்ளையர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 80 சதவீதம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலரை தேடி வருகிறோம்'' என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
 பிகார் மாநிலத்தில் 1968ம் ஆண்டு 30 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்தவர் மண்டல். இவரது தலைமையில் தான் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு, இந்த கமிஷனின் பரிந்துரையின் பேரிலேயே இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமலாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மண்டல் 1982ம் ஆண்டில் காலமானார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com