மல்லையாவுக்கு எதிராக ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை? வங்கி அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற வாய்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சிபிஐ இன்னும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லையாவுக்கு எதிராக ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை? வங்கி அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற வாய்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சிபிஐ இன்னும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குற்றப்பத்திரிகையில், வங்கி அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெறக் கூடும் என்று தெரிகிறது.
 பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிய தொழிலதிபர் மல்லையா, அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து லண்டனுக்குத் தப்பிச் சென்ற அவர், வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவுக்கு வராமல் உள்ளார்.
 அவர், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.6,000 கோடி வரை கடன் வாங்கினார். அதில், பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து மட்டும் ரூ.1,600 கோடி கடன் வாங்கினார். இந்தக் கடனை கடந்த 2005 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மல்லையா வாங்கினார்.
 இதுதவிர, ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் வாங்கினார். இந்த இரு கடன்களும் வாராக் கடனாகின. இதையடுத்து, ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டிலும், எஸ்பிஐ உள்ளிட்ட 17 வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடன் தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டிலும் சிபிஐ தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி குறித்து மல்லையாவுக்கு எதிராக சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டது.
 இந்நிலையில், எஸ்பிஐ உள்ளிட்ட 17 வங்கிகளிடம் மல்லையா வாங்கிய கடன் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
 சிபிஐ தாக்கல் செய்யவுள்ள குற்றப்பத்திரிகையில் மல்லையா, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைமை நிதி மேலாளர் ஏ.ரகுநாதன் மற்றும் அந்த நிறுவனத்தின் மூத்த முன்னாள் நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெறவுள்ளன. இதுதவிர, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் முன்னாள் மற்றும் இன்னாள் அதிகாரிகளின் பெயர்களும் அந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளது. ஏனெனில், அவர்கள் தங்களது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.
 மேலும், மல்லையாவுக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகள் முடிவு செய்ததில், மத்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் தலையீடு இருந்ததா என்று சிபிஐ ஆய்வு செய்து வருகிறது. எனினும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com