இந்தியா - மால்டா இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள்: கடல்சார் பாதுகாப்பில் இணைந்து செயல்பட முடிவு

இந்தியா - மால்டா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின.
இந்தியா - மால்டா இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள்: கடல்சார் பாதுகாப்பில் இணைந்து செயல்பட முடிவு


இந்தியா - மால்டா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அந்நாட்டில் மேற்கொண்டிருக்கும் அரசுமுறைப் பயணத்தின் ஒருபகுதியாக இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடல்சார் பாதுகாப்பில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவு செய்திருப்பது அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான மால்ட்டாவுக்கு வெங்கய்ய நாயுடு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். இந்தியாவின் முக்கியத் தலைவர் ஒருவர் அந்நநாட்டுக்குச் செல்வது கடந்த 28 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.
அங்கு பல்வேறு பிரமுகர்களையும், தலைவர்களையும் சந்தித்து வரும் வெங்கய்ய நாயுடு, மால்டா அதிபர் மேரி லூயிஸ் கொலெய்ரோ ப்ரேகாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளிலும், சர்வதேச விவகாரங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்தியா - மால்டா இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும், கருத்துகளையும் பரஸ்பரம் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடல்சார் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை நிறுவனங்கள் மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக தனித்தனியே அந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது: இந்தியாவும், மால்டாவும் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. இரு நாட்டு பொருளாதார நிலை சிறப்பாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் இருக்கின்றன. பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கும், மால்டாவுக்கும் ஒற்றுமைகள் நிறைந்துள்ளன. எனவே, இரு தரப்பும் இணைந்து செயல்பட்டால் பரஸ்பரம் துரித வளர்ச்சியை அடைய முடியும்.
பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், மனித வள மேம்பாடு ஆகிய துறைகள் அவற்றில் முக்கியமானவை. அவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது அவசியம்.
தகவல் - தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேபோன்று மருத்துவம், நிதி, போக்குவரத்து, சுற்றுலா, மருந்தகம் என பல துறைகளில் திறன் மிக்க இந்தியர்கள் கோலோச்சி வருகின்றனர். அவர்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் மால்டாவுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் பயங்கரவாதம்தான் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதை ஒருங்கிணைந்து வேரறுக்க வேண்டியது முக்கியம். இந்தியாவுடன் இணைந்து அத்தகைய நடவடிக்கைகளில் மால்டாவும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
முன்னதாக, மால்டா நாட்டின் பொறுப்பு பிரதமர், நாடாளுமன்ற தலைவர், பொருளாதாரத் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை வெங்கய்ய நாயுடு சந்தித்துப் பேசினார். பயணத்தின் அடுத்தகட்டமாக அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடமும் அவர் கலந்துரையாட உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com