ரபேல் விவகாரம்: மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் குழு புகார் மனு 

மத்திய அரசுக்கு சிக்கலாக இருக்கும் ரபேல் விவகாரம் தொடர்பாக மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு  ஒன்று புகார் மனு அளித்துள்ளது.
ரபேல் விவகாரம்: மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் குழு புகார் மனு 

புது தில்லி: மத்திய அரசுக்கு சிக்கலாக இருக்கும் ரபேல் விவகாரம் தொடர்பாக மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு  ஒன்று புகார் மனு அளித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.  இந்த ஒப்பந்தத்தினை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த விவகாரத்தில் தனியார் நிறுவனத் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர். இது ஒரு கூட்டு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது என்றும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. 

அதன் உச்சமாக ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனி செவ்வாயன்று விமர்சனம் செய்திருந்தார். அத்துடன் மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்நிறுவனத்தின் திறனைப் பற்றி நிர்மலா சீதாராமன் அவநமபிக்கையுடம் பேசுவதாகவும் அவர் புகார் கூறியிருந்தார். 

இந்நிலையில் மத்திய அரசுக்கு சிக்கலாக இருக்கும் ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு  ஒன்று புகார் மனு அளித்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா தலைமையிலான இந்த குழுவில் ஏ.கே .அந்தோணி, அஹமது படேல், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜிவாலா, ராஜிவ் சுக்லா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் ஷர்மா கூறியதாவது:

காங்கிரஸ் குழு ஒன்று மத்திய தலைமை பொது கணக்காயர் மற்றும் அவரது அலுவலக உயர் அதிகாரிகளைச் புதனனன்று சந்தித்தது.. ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் தவறு நடந்துள்ளதை உறுதிப்படுத்தும்  வகையிலான ஆதாரங்களுடன், விரிவான குறிப்பாணை ஒன்றை கணக்காயரிடம் அளித்துள்ளோம்.  

அந்த குறிப்பாணையில் ரபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறிப்பாக விமானங்களின் எண்ணிக்கை தொடர்பான பிரதமர் மோடியின் யதேச்சதிகார முடிவு மற்றும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட்  இந்த ஒப்பந்தத்தில் விடுபட்டது ஆகியவை தொடர்பான விபரங்கள் இடம்பெற்றுள்ளன. 

அரசியல் சாசன ரீதியான அதிகாரம் பெற்றுள்ள மத்திய தலைமை பொது கணக்காயர் இந்த விவகாரத்தினை உடனடியாக கவனிப்பாரென்று எதிர்பார்க்கிறோம். சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில்  விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com