காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணியால் எங்களுக்கே லாபம்: பாஜக கருத்து

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுவது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று அக்கட்சி

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுவது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி, ஒரு குடும்பத்தினரின் கடை போல செயல்பட்டு வருவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. 
தெலங்கானா மாநிலத்தில் அரசின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு இருந்தபோதிலும், ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்ததன் அடிப்படையில் சட்டப்பேரவை அண்மையில் கலைக்கப்பட்டது. இதனால், அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த முறை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் 15 சதவீத வாக்குகளுடன் தெலுங்கு தேசம் 15 தொகுதிகளிலும், 7 சதவீத வாக்குகளுடன் பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
அதன் பின்னர் இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்த நிலையில், தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது.
மற்றொருபுறம், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ஜன சமிதி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இதில், தெலுங்கு தேசம் என்பது ஆந்திர மாநிலத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டது என்ற விமர்சனமும் உள்ளது. 
இந்நிலையில், அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தேர்தல் ரீதியாக அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று, மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
கடந்த முறை, பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் எங்களுக்கு சரிவு ஏற்பட்டது. தெலங்கானாவில், தெலுங்கு தேசம் கட்சியால் எங்களது நலனே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, அந்தக் கட்சியுடனான கூட்டணியை நாங்கள் முடித்துக் கொண்டோம். தற்போது இந்தச் சுமை காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டது. அது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறோம்.
ஆளும் டிஆர்எஸ் கட்சியை எதிர்கொள்ளும் திறன் இல்லை என்பதை உணர்ந்தே சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 
அதே சமயம், டிஆர்எஸ் கட்சிக்கான பிரதான சவாலாக நாங்கள் இருப்போம். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com