நல்கொண்டா ஆணவக் கொலை: மாருதி ராவின் தப்பிக்கும் திட்டம் கடைசி நேரத்தில் சொதப்பியது எப்படி?

தனது பெண்ணை மணம்முடித்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பிரனாயியின் மரணத்தை திட்டமிட்டு அரங்கேற்றிய மாருதி ராவின் தப்பிக்கும் திட்டம் மட்டும் அவர் நினைத்தபடி நடக்கவில்லை.
நல்கொண்டா ஆணவக் கொலை: மாருதி ராவின் தப்பிக்கும் திட்டம் கடைசி நேரத்தில் சொதப்பியது எப்படி?


நல்கொண்டா: தனது பெண்ணை மணம்முடித்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பிரனாயியின் மரணத்தை திட்டமிட்டு அரங்கேற்றிய மாருதி ராவின் தப்பிக்கும் திட்டம் மட்டும் அவர் நினைத்தபடி நடக்கவில்லை.

கொலையில் ஈடுபட்ட அஸ்கர் அலி, அப்துல் பாரி, சுபாஷ் ஷர்மா ஆகியோருக்கு ரூ.1 கோடி தருவதாகப் பேரம் பேசி பிரனாயியைக் கொல்ல மாருதி ராவ் திட்டமிட்டார். முதற்கட்டமாக ரூ.16 லட்சத்தை கூலிப்படைக்கு மாருதி ராவ் அளித்துள்ளார்.

கொலை நடந்ததும் சில நாட்களுக்கு மூன்று பேரும் தலைமறைவாக இருக்கும்படியும், பிறகு அஸ்கர் அலியும், சுபாஷ் ஷர்மாவும் காவல்நிலையத்தில் சரணடைந்து தாங்கள் மட்டும் கொலையை செய்ததாக ஒப்புக் கொள்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இதனை பாரிக்கு தெரிவிக்காமல் விட்டுவிட்டதே சதிச் செயல்  அம்பலத்துக்கு வரக் காரணமாகிவிட்டது.

பிரனாயியைக் கொலை செய்ததுமே பாரி, மாருதி ராவுக்கு போன் செய்து வேலையை முடித்து விட்டதாகக் கூறியுள்ளார். அவர் போனை வைத்த அடுத்த நொடி மகள் அம்ருதவர்ஷினி போன் செய்து தனது கணவரை யாரோ தாக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த மாருதி ராவ், தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கொலையாளிகள் பதறினர்.

கொலை நடந்த போது முக்கியப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற மாருதி ராவ், சம்பவத்தின் போது தான் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்ததாகக் காட்டிக் கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஒரே ஒரு செல்போன் அழைப்பால் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

தான் எங்கே சிக்கிக் கொள்வோமோ என்று பயந்த மாருதி ராவ், கொலை பற்றி கார் ஓட்டுநரிடம் கூறி, எங்காவது காருடன் சென்றுவிடுமாறு சொல்லிவிட்டு, தனது மைத்துனர் உதவியோடு தலைமறைவாகிவிட்டார்.

பிரனாயி கொலையானதுமே சந்தேகத்துக்கு இடமின்றி மாருதி ராவின் மீதுதான் காவல்துறையினரின் பார்வை திரும்பியது. குற்றவாளிகளின் செல்போன் அழைப்பும் முக்கிய சாட்சியாக அமைய மாருதி ராவ் சிக்கிக் கொண்டார்.

வேலை முடிந்தது!
(பணி ஆயிப்போயிந்தி, மிகட்ட டப்புலு ரெடி சேஸுகோன்டி) என மாருதி ராவிடம் பாரி கூறியிருந்ததும் வெட்ட வெளிச்சமானது. அதாவது, வேலை முடிந்துவிட்டது, மிச்சப் பணத்தை தயார் செய்யவும் என்று பாரி மாருதி ராவிடம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com