ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: ஹெச்ஏஎல் நிறுவனம் விடுபட்டதற்கு காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணம்

ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் விடுபட முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு
ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: ஹெச்ஏஎல் நிறுவனம் விடுபட்டதற்கு காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணம்


ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் விடுபட முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துக்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் நற்பெயருக்கு நிர்மலா சீதாராமன் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி புகார் கூறியிருந்த நிலையில், நிர்மலா சீதாராமன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தில்லியில் இந்திய மகளிர் பத்திரிகையாளர்கள் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின்போது அவர் கூறியதாவது: உற்பத்தி தொடர்பான நிபந்தனைகளை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனமும், பிரான்ஸின் டஸால்ட் நிறுவனமும் ஒப்பு கொள்ளவில்லை. 
இதனால் அந்த 2 நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடியவில்லை. இதையடுத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இயலாது என்று டஸால்ட் தெரிவித்தது. இதையேற்று, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்தது அப்போதைய அரசு என்றார் நிர்மலா சீதாராமன்.
ராணுவ வீரர்களை குறைக்கும் திட்டமில்லை': இந்திய ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கையில் 1 லட்சம் வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், ராணுவத்தில் வீரர்களை குறைப்பது தொடர்பான திட்டம் எதுவும் என்னிடம் வரவில்லை. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு, ராணுவத்தை சக்திமிக்கதாக்கவும், நவீனமயமாகவும் மாற்றுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து ராணுவ தலைமை தளபதி விபின் ராவத், உயர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்' என்றார்.
சித்து தவிர்த்திருக்கலாம்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்து சென்றபோது, அங்கு வந்த அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி ஆரத்தழுவினார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் சித்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்ததாவது:
சித்துவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட நபர், பாகிஸ்தானுக்கு சென்று, அந்நாட்டு ராணுவ தளபதியை ஆரத்தழுவியுள்ளார். பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியை சித்து ஆரத்தழுவியது, நமது ராணுவ வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களையும் விரக்தியடைய செய்யும். பாகிஸ்தான் தளபதியை ஆரத்தழுவியதை சித்து தவிர்த்திருக்கலாம் என்றார் நிர்மலா சீதாராமன்.
வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நல்ல போட்டி நிலவும். எனினும், தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும். ரஃபேல் போர் விமானம் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலளித்து விட்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால், ரஃபேல் போர் விமானங்களுக்கு இறுதி செய்யப்பட்ட அடிப்படை விலையுடன் ஒப்பிடுகையில், தற்போது 9 சதவீதம் குறைவான விலையிலேயே அந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com