முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கு: 4 அரசு அதிகாரிகள் கைது

முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கில் 4 அரசு அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளனர்.
முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கு: 4 அரசு அதிகாரிகள் கைது

முசாஃபர்பூர் சிறுமிகள் பாலியல் வழக்கில் 4 அரசு அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளனர். 

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பிகார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை அடுத்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள், இன்று (வியாழக்கிழமை) 4 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், 

"2015-17-இல் சமூக நலத்துறையின் துணை இயக்குநராக ரோஸி ராணி இருந்துள்ளார். இந்த காப்பகத்தில் இவர் ஆய்வு நடத்திய போதெல்லாம் அங்கு இருக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குறித்து அவரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வருகிறது. இதுதொடர்பாக காப்பக சிறுமிகள் புகார் அளித்த போதிலும் ரோஸி ராணி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அதனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த காரணத்துக்காக அவர் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும்" என்றனர்.  

ரோஸி ராணியுடன், காப்பகத்தின் ஊழியர்கள் குட்டு, விஜய் மற்றும் சந்தோஷ் ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

இவர்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கையில், 

"காப்பகத்துக்கு இந்த மூவரும் சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனால், இந்த குற்றத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று சிபிஐ சந்தேகிக்கிறது. பிரஜேஷ் தாகூரின் 20 வங்கிக் கணக்குகள் சிபிஐயால் முடக்கப்பட்டுள்ளது" என்றனர். 

வழக்கு விவரம்: 

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முசாஃபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அதிகாரி ரவிகுமார் ரௌஷனும் ஒருவர்.    

இந்த கைது நடவடிக்கையை அடுத்து ரவிகுமாரின் மனைவி ஷிவ்குமாரி, 'அமைச்சர் மஞ்சுவின் கணவர் சந்தேஷ்வர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைகளுக்கு அடிக்கடி தனியாக சென்றுள்ளார்' என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்,"எனது கணவர் குற்றவாளியாக அறியப்பட்டால், பொதுவெளியில் அவரை தூக்கிலிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது" என்று அமைச்சர் மஞ்சு வெர்மா தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தால் மஞ்சு வெர்மா கடந்த மாதம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். 

இதையடுத்து, கடந்த மாதம் அமைச்சர் மஞ்சு வெர்மா இல்லம் உட்பட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com