பாலியல் குற்ற வழக்குகளை பரபரப்பாக்க வேண்டாம் - ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

பாலியல் குற்ற வழக்குகளை ஊடகங்கள் பரபரப்பாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. 
பாலியல் குற்ற வழக்குகளை பரபரப்பாக்க வேண்டாம் - ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் 

பாலியல் குற்ற வழக்குகளை ஊடகங்கள் பரபரப்பாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. 

பிகார் மாநிலம், பாட்னாவில் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சிபிஐ சார்பாக புதிய விசாரணைக் குழு அமைக்க வேண்டும் மற்றும் இந்த வழக்கு குறித்தான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதித்தும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

பிகார் தலைநகர் பாட்னாவில், மாநில அரசின் நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த காப்பகத்தில் மொத்தமுள்ள 42 சிறுமிகளில் 34 பேர் வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மருத்துவ ஆய்வில் உறுதியானது.

இதுதொடர்பாக காப்பகத்தின் தலைவர், வார்டன்கள் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாட்னா உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஏற்கெனவே சிபிஐ சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழலில், உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை குறித்த தகவல்கள் கசிந்து வருவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததுடன், ஊடகங்களில் வழக்கு குறித்து செய்திகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

அதே சமயம், வழக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ சார்பாக புதிய விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பாக, பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
 
அப்போது, காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ சார்பாக ஏற்கெனவே அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி வரும் இந்தச் சூழலில், புதிய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டியதற்கான காரணம் எதுவும் இல்லை'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, புதிய விசாரணைக் குழு அமைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை தடை விதித்தது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றம் முன் வந்தது. அப்போது, பிகாா் காப்பக வன்கொடுமை வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பரபரப்புக்குள்ளாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது. மேலும், பாலியல் வன்கொடுமைக்குள்ளான குழந்தைகள் மற்றும் பெண்களின் புகைப்படத்தையும் வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com