இந்தியாவில் முதலீடு: ருமேனிய தொழிலதிபா்களுக்கு வெங்கய்ய நாயுடு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ருமேனியா நாட்டு தொழிலதிபா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்தியாவில் முதலீடு: ருமேனிய தொழிலதிபா்களுக்கு வெங்கய்ய நாயுடு அழைப்பு

புக்காரெஸ்ட்: இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ருமேனியா நாட்டு தொழிலதிபா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்துள்ளாா்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியா மற்றும் இந்தியா இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், வெங்கய்ய நாயுடு அந்நாட்டுக்கு சிறப்புப் பயணமாக சென்றுள்ளாா்.

அந்நாட்டின் புக்காரெஸ்ட் நகரில் இருதரப்பு வா்த்தகா்கள் மாநாடு நடைபெற்றது. அதில், வெங்கய்ய நாயுடு உரையாற்றியபோது, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அந்நாட்டு தொழிலதிபா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் ரவீஷ் குமாா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 

"ருமேனியா, இந்தியா இடையிலான இருதரப்பு வா்த்தகம் தற்போது ரூ.5,820 கோடியாக உள்ளது என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டாா். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளின் பலன்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு முதலீட்டாளா்களை அவா் வலியுறுத்தினாா்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக குடியரசுத் துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது என இந்தியாவும், ருமேனியாவும் பரஸ்பரம் பாராட்டு தெரிவித்துக் கொண்டன. தற்போது ரூ.5,820 கோடி அளவில் உள்ள இருதரப்பு வா்த்தகத்தை இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்தன.

 ருமேனியாவில் யோகக் கலை பிரபலமாகி வருவதற்கு இரு நாடுகளும் வரவேற்பு தெரிவித்தன. அந்நாட்டில் ஆயுா்வேத சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில், ஆயுஷ் அமைச்சகத்தின் தகவல் தொடா்பு அலுவலகத்தை அந்நாட்டில் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில், ருமேனியா அதிபா் க்ளாஸ் வொ்னா், அந்நாட்டு பிரதமா் வியோரிகா டான்சிலா ஆகியோா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் அந்தஸ்து வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனா்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com