அனுமானங்களின் அடிப்படையில் தனிமனித சுதந்திரத்தை பலியிட முடியாது: இடதுசாரி ஆர்வலர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

பீமா-கோரேகான் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் ஐவரின் வழக்கை பருந்துக் கண்' கொண்டு
அனுமானங்களின் அடிப்படையில் தனிமனித சுதந்திரத்தை பலியிட முடியாது: இடதுசாரி ஆர்வலர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து


பீமா-கோரேகான் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் ஐவரின் வழக்கை பருந்துக் கண்' கொண்டு ஆராய வேண்டியுள்ளது என்றும், அவர்கள் மீதான அனுமானங்களின் அடிப்படையில், தனிமனித சுதந்திரத்தை பலியிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேர் மீதான விசாரணை சுதந்திரமான முறையில் நடைபெற வேண்டும் எனவும், அவர்கள் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட ஐவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணையில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது, மக்களாட்சியின் பாதுகாப்பு வால்வு' போன்றது' என்று தெரிவித்து, 5 இடதுசாரி ஆர்வலர்களையும் வீட்டுக்காவலில் வைக்க, கடந்த மாதம் 29-ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டுக்காவலை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீட்டித்து கடந்த திங்கள்கிழமை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, மகாராஷ்டிர அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சட்ட ஆலோசகர் துஷார் மேத்தா, இது மிகவும் சிக்கலான, சீரிய வழக்காகும்.
வழக்கின் அனைத்து வாதங்களையும் அலசி ஆராய்ந்த பிறகே நீதிமன்றம் தகுந்த தீர்ப்பினை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: நிச்சயமாக தங்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வழக்கினை பருந்துக் கண்' கொண்டு தீவிரமாக நாங்கள் ஆராய்வோம். வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும், வாதங்களையும் முழுமையாக ஆராய்ந்த பிறகே தீர்ப்பு வழங்கப்படும். 
அதே நேரத்தில், அரசுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும், அரசுக்கு எதிராக சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் இடையேயான தெளிவான வேறுபாட்டை அரசுகள் வரையறை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து, இடதுசாரி ஆர்வலர்கள் ஐவரின் வீட்டுக்காவலை இன்று வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நடந்த எல்கார் பரிஷத்' நிகழ்ச்சியில் வெடித்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, மகாராஷ்டிர காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனைகளில், எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி ஆர்வலர்கள் வெர்னோன் கான்சல்வேஸ், அருண் பெரைரா, வழக்குரைஞர் சுதா பரத்வாஜ், ஆர்வலர் கெளதம் நவ்லகா ஆகியோர் கடந்த மாதம் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com