காலத்தை வென்ற கைக்கடிகாரம்!: பெங்களூரில் எச்.எம்.டி. அருங்காட்சியகம்

பெங்களூரில் எச்.எம்.டி கைக்கடிகாரங்களின் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய மையம் அமைக்க பொதுத் துறை நிறுவனமான எச்.எம்.டி. திட்டம் வகுத்துள்ளது.
காலத்தை வென்ற கைக்கடிகாரம்!: பெங்களூரில் எச்.எம்.டி. அருங்காட்சியகம்


பெங்களூரில் எச்.எம்.டி கைக்கடிகாரங்களின் அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய மையம் அமைக்க பொதுத் துறை நிறுவனமான எச்.எம்.டி. திட்டம் வகுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முயற்சியால் 1953-இல் நுண், துல்லியப் பொருள்கள், இயந்திரக் கருவிகளைத் தயாரிப்பதற்காக இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (எச்.எம்.டி.) நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கியது. 

இந் நிறுவனத்தின் தொழில் நேர்த்தியைக் கண்டுணர்ந்த மத்திய அரசு, கைக்கடிகாரங்களைத் தயாரிக்கும் பொறுப்பை அளித்தது. இதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் சிட்டிசன் வாட்ச் நிறுவனத்தின் கூட்டிணைவில் கைக்கடிகாரம் தயாரிப்பதற்கான பிரிவு 1961-இல் பெங்களூரில் தொடங்கப்பட்டது. 

இதர தயாரிப்புகள்: இந்தியாவில் கைக்கடிகாரங்களைத் தயாரித்த முதல் நிறுவனமான எச்.எம்.டி. நிறுவனம் தயாரித்த சுவர் கடிகாரங்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, எச்.எம்.டி. கைக்கடிகாரங்களுக்கு நாடெங்கும் விற்பனை அதிகரித்தது. முதல் இயந்திரவியல் கைக்கடிகாரத்தைத் தயாரித்திருந்த எச்.எம்.டி., இந்தியாவின் முதல் தானியங்கி, நாள் மற்றும் தேதி கைக்கடிகாரம் (குவார்ட்ஸ்), முதல் பிரைல் கைக்கடிகாரம் (பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக), முதல் பெண்கள் கைக்கடிகாரம், உள்கருவிகளைக் காணும் வகையிலான முதல் வெளிப்படை கைக்கடிகாரங்கள், முதல் இயந்திரவியல்-தானியங்கி கைக்கடிகாரங்களைத் தயாரித்தது.

தலைவர்களின் விருப்பம்: முதல் கைக்கடிகாரத்தின் விற்பனையை அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடக்கி வைத்தார். மக்களின் மனங்களைக் கவர்ந்த எச்.எம்.டி. கைக்கடிகாரங்களைக் கட்டுவதே காலத்தின் பெருமை என்று கருதப்பட்டது. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, எச்.டி.தேவெ கெளடா, அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டோர் எச்.எம்.டி. கைக்கடிகாரங்களையே கட்டி வந்தனர். 

இன்றும் புதுமை: கடந்த 57 ஆண்டுகளில் 1.1 கோடி கைக்கடிகாரங்களைத் தயாரித்துள்ள எச்.எம்.டி., கால வெள்ளத்தில் எழுந்த போட்டிகளையும் மீறி இன்றைக்கும் விதவிதமான, புதுமையான கைக்கடிகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனாலும் எச்.எம்.டி. நிறுவனத்தின் பழம் பெருமைகள் அனைவரிடமும் சென்றடையாமல் உள்ளது. 

அருங்காட்சியகம்: எச்.எம்.டி.நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து வகையான கைக்கடிகாரங்கள், அதன் நுண்கருவிகள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் நோக்கில் பெங்களூரு, ஜாலஹள்ளியில் எச்.எம்.டி. பாரம்பரிய மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. 
இந்தியாவின் முதல் தேசிய கடிகார பாரம்பரிய மையம் என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் எச்.எம்.டி. தயாரித்த அனைத்து வகையான கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இயந்திரக் கைக்கடிகாரத்தில் முகடு முதல் பட்டை வரை இடம்பெற்றிருக்கும் 120 துணைப் பொருள், கருவிகள், கைக்கடிகாரங்களின் தயாரிப்பு மற்றும் சீரமைக்கப் பயன்பட்ட கருவிகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
 
ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், சிறப்பிதழ்கள், வருகையாளர் பதிவேடு, நினைவுச் சின்னங்கள், விருப்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காட்சியில் இடம்பெறவுள்ளன. கால அறையின் பயணம் என்ற பிரிவில் எச்.எம்.டி. கைக்கடிகாரங்கள் குறித்த அனைத்து விவரங்களும் வைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்தில் குழந்தைகளுக்காக சிற்றுண்டியகம், பூங்காவும் அமைக்கப்படும் என்று எச்.எம்.டி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com