கோவாவில் ஆட்சி அமைக்க தேவையான பலம் எங்களிடம் உள்ளது: காங்கிரஸ்

கோவாவில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


கோவாவில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லிகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சி அதனைப் பெற்றுள்ளது. கோவாவில் தற்போது முதல்வர் பதவியைப் பிடிப்பதில், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு கட்சியைச் சார்ந்தவர் முதல்வரானால், மற்றொரு கட்சிக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் அளவிலான குழப்பமான சூழல் நிலவி வருகிறது. பாஜகவைச் சேராத ஒருவர், முதல்வராக நியமனம் செய்யப்பட இருப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள பாஜக உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர். 
ஆட்சி அமைக்க நாங்கள் மற்ற கட்சி உறுப்பினர்களிடம் ஆதரவு கோரத் தேவையில்லை. அவர்களே தாமாக முன்வந்து, தொடர்ந்து எங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்று சந்திரகாந்த் கூறினார். 
உடல் நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.
சந்திரகாந்த் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து, சட்டப் பேரவையில் பாஜக தனது பலத்தை நிரூபிக்க வலியுறுத்தி, ஒரு நாள் மட்டும் பேரவையை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா பேரவையில், பாஜகவுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸுக்கு 16 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனினும், கோவா முன்னேற்றக் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலா 3 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com