பாக். ராணுவ தலைமைத் தளபதியை தழுவியது ரஃபேல் ஊழல் போன்றதல்ல: சித்து கருத்து

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை நான் ஆரத் தழுவியது சிறிய சம்பவமே; அது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் போன்ற மிகப்பெரிய ஊழல் இல்லை'
பாக். ராணுவ தலைமைத் தளபதியை தழுவியது ரஃபேல் ஊழல் போன்றதல்ல: சித்து கருத்து


பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை நான் ஆரத் தழுவியது சிறிய சம்பவமே; அது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் போன்ற மிகப்பெரிய ஊழல் இல்லை' என்று பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், சித்து இவ்வாறு கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழா கடந்த மாதம் நடைபெற்றது. அந்த விழாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் சுற்றுலாத் துறை அமைச்சருமான சித்து சென்றிருந்தார். விழா நடுவே சந்தித்துக் கொண்ட பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவும், சித்துவும் ஆரத் தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சீக்கிய குருத்வாராவுக்கு வரும் பஞ்சாப் மாநில சீக்கியர்களுக்காக, கர்தார்பூர் எல்லை வழித்தடம் திறக்கப்படும் என்று ஜாவேத் பஜ்வா உறுதியளித்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியை சித்து ஆரத் தழுவிய சம்பவம், இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த சில கட்சியினர், சித்துவை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன், சித்துவின் செயல், இந்திய ராணுவ வீரர்களின் நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை ஆரத் தழுவியதை அவர் தவிர்த்திருக்கலாம்' என்றார். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, சித்து புதன்கிழமை கூறியதாவது:
அந்த சம்பவம் குறித்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்ததன் மூலம், நான் முக்கியமான நபராக மாறிவிட்டேன். பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை நான் ஆரத் தழுவியது சிறிய சம்பவமே; அது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் போன்ற மிகப்பெரிய ஊழல் இல்லை. மேலும், அதில் சதித் திட்டம் ஏதுமில்லை. ஆனால், சில விநாடிகள் நடந்த அந்த சம்பவத்தை அவர் தேவையின்றி பெரிதுபடுத்தி பார்க்கிறார். ஆனால், அங்குள்ள சீக்கியர்களின் நலன் குறித்து அவர் பேசவில்லை.
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால், அந்நாட்டு வீரர்களுடன் கை குலுக்க வேண்டாம் என்று இந்திய வீரர்களிடம் அவர் கூறுவாரா?
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.அவர், இந்திய கிரிக்கெட் வீரர்களைச் சந்திக்கும்போது, அவருடன் கை குலுக்காமல் அல்லது ஆரத் தழுவாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு நமது வீரர்கள் சென்று விடுவார்களா? என்று சித்து கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com