பிஎஸ்எஃப் வீரரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் படையினர்: எல்லையில் உஷார் நிலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவரை பாகிஸ்தான் படையினர் கழுத்தை அறுத்து


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் ஒருவரை பாகிஸ்தான் படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, எல்லை நெடுகிலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் வட்டாரங்கள் கூறியதாவது:
ஜம்மு அருகே ராம்கார் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இருக்கும் புற்களை வெட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை காலை பிஎஸ்எஃப் வீரர்கள் குழு சென்றது. அப்போது அக்குழுவில் இருந்த தலைமைக் காவலர் நரேந்தர் சிங் என்பவரை காணவில்லை.
இதைத் தொடர்ந்து, அவரை தேடும் பணியில் பிஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் தரப்பிடம் நரேந்தர் சிங்கை இருதரப்பும் சேர்ந்து தேடலாம் என்று இந்தியா சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் சரியான பதில் அளிக்கப்படவில்லை. அப்பகுதியில் நீர் தேங்கியிருப்பதால், இருதரப்பும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட முடியாது என பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது.
எனவே, சுமார் 6 மணி நேரத்துக்குப் பிறகு நரேந்தர் சிங்கை செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் தேடும் பணியில் பிஎஸ்எஃப் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது எல்லையில் இருக்கும் வேலி அருகே கழுத்து அறுபட்ட நிலையில், நரேந்தர் சிங் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரது உடலில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான அடையாளமாக 3 தோட்டாக்களும் பாய்ந்திருந்தன.
முதலில் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் அவரை சுட்டுவிட்டு, பின்னர் கழுத்தை அறுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது. இதற்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிஎஸ்எஃப் கூறியுள்ளது.
சர்வதேச எல்லைப் பகுதியில் இதுபோல் கொடூர சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால், இந்த சம்பவத்தை மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் தீவிர பிரச்னையாக எடுத்து கொண்டுள்ளன. 
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான ரேஞ்சர்ஸ் படையிடம் பிஎஸ்எஃப் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும் இந்திய ராணுவ நடவடிக்கைகள் டைரக்டர் ஜெனரல் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தின் விளைவாக, சர்வதேச எல்லைப் பகுதி, எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் உஷார் நிலையில் இருக்கும்படி இந்திய பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com