முத்தலாக் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு
முத்தலாக் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


முத்தலாக் முறையை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.
இச்சட்டப்படி முத்தலாக் முறையில் உடனடியாக விவாகரத்து செய்வது சட்டப்படி செல்லாதது மட்டுமின்றி சட்டவிரோதமானதுமாகும்.
3 ஆண்டுகள் சிறை: இதனை மீறி முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். எனினும், இந்த சட்டத்தில் ஜாமீன் பெறும் பிரிவு கடந்த மாதம் சேர்க்கப்பட்டது. நேரில் முத்தலாக் கூறுவது மட்டுமின்றி கடிதம், இ-மெயில், எஸ்எம்எஸ் உள்ளிட்டவை மூலம் முத்தலாக் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய விவாகரத்துகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவு: உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும், முத்தலாக் முறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா, மக்களவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேறிவிட்டது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
முன்னதாக, முத்தலாக் விவாகரத்து முறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் திருமணச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.
முஸ்லிம் பெண்களுக்கு நீதி': முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
22 இஸ்லாமிய நாடுகள், பல்வேறு சட்டங்கள் மூலம் முத்தலாக் முறையை சீரமைத்துவிட்டன. ஆனால், மதச்சார்பற்ற நாடான, இந்தியாவில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் (காங்கிரஸ்) முஸ்லிம் பெண்களுக்கான நீதியை மறுத்து வந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு விரைந்து செயல்பட்டு முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் திருமணச் சட்டத்தை உருவாக்கியது. இப்போது, அது தொடர்பான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், முத்தலாக்கை தடை செய்யும் அவசர சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: தங்கள் வாங்கு வங்கி பறிபோய்விடும் என்ற காரணத்துக்காக காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை நிறைவேற்ற மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கவில்லை. இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளனம் காத்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். உண்மையிலேயே நமது நாட்டின் பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்; பாலின சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவுக்கு அவர்கள் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும்.
சோனியா காந்தி மட்டுமல்ல, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து பெண்களின் கண்ணியத்தை காக்க உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஆதரவு கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவை 5 முறை சந்தித்துப் பேசியுள்ளேன். ஆனால், தங்கள் தலைமையிடம் கேட்டுவிட்டு முடிவு தெரிவிப்பதாக' அவர் கூறினார். ஆனால், சாதகமான பதில் எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் ஒத்துழைப்பைப் பெற நாங்கள் தீவிரமாக முயற்சித்தோம் என்றார்.
ஜாமீன் உண்டு: முத்தலாக் தடை சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இதில் ஜாமீன் வழங்கும் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய பிறகு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதிபதி ஜாமீன் அளிக்க முடியும். ஜாமீன் பெறுவதற்கு முன்பு, மனைவிக்கு உரிய நிவாரணம் அளிப்பேன்' என்று புகாருக்கு உள்ளான நபர் உறுதியளிக்க வேண்டும்.
மேலும், இச்சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண், அவரது ரத்த உறவுகள், திருமணத்தில் சாட்சியாக இருந்த உறவினர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். அண்டை வீட்டார்கள் உள்ளிட்ட பிற நபர்கள் புகார் அளிக்க முடியாது.
ஒரு பெண் புகார் அளிக்கும்போது, அவருடைய கணவருடன் உள்ள பிரச்னையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள நீதிபதி உதவ முடியும். மேலும், இரு தரப்பினரும் ஒற்றுமை அடைந்து புகாரை திரும்பப் பெறவும் முடியும்.

தலைவர்கள் கருத்து...
பாஜக தலைவர் அமித் ஷா:

முத்தலாக் தடை அவசர சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு, நமது சமுதாயத்தில் முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் வாழ வழி செய்துள்ளது. இவ்வளவு காலமாக, பல அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக முஸ்லிம் பெண்களை பாதிப்பிலேயே வைத்திருந்தன.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட தங்களுடைய அரசியல் விளையாட்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலேயே முத்தலாக் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டு வருகிறது.எங்களைப் பொருத்தவரையில் நடைமுறையில் இருந்த முத்தலாக் முறையில் பெண்களுக்கான உரிமைகள் இருந்தன. அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட்டது என்றார்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைசி: மத்திய அரசின் அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியத்தைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது பொதுமக்களில் இருவர் இடையே ஏற்படும் பந்தம். அதில் தண்டனைச் சட்டத்தைக் கொண்டுவருவது தேவையற்ற நடவடிக்கை. இதன் மூலம் அடிப்படை உரிமையும், சமவாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com