ரஃபேல்: விசாரணைக்கு உத்தரவிட முடியாது: காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி
ரஃபேல்: விசாரணைக்கு உத்தரவிட முடியாது: காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு


ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
இதுகுறித்து தில்லியில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தலைவர் ஒருவர் திரும்பத் திரும்ப பொய்களை தெரிவித்து வருகிறார். கர்வம் பிடித்த அந்தத் தலைவரை திருப்திப்படுத்துவதற்காக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கோ அல்லது மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) விசாரணைக்கோ உத்தரவிட முடியாது (காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார்).
உள்நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரஃபேல் போர் விமானத்தை தயாரிப்பது தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டபோது, பாதுகாப்புத் துறை அமைச்சராக ஏ.கே. அந்தோணிதான் இருந்தார். அதை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏற்கெனவே விளக்கமாக எடுத்துரைத்து விட்டார்.
பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை நிலையற்ற தன்மையில் விட்டுச் சென்றது ஏ.கே. அந்தோணிதான். இதனால்தான், ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிப்பது சிக்கலானது. இதுகுறித்து ஏ.கே. அந்தோணி பதில்கள் அளிக்க வேண்டியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக 8 ஆண்டுகளாக ஏ.கே. அந்தோணி இருந்துள்ளார். இக்காலகட்டத்தில், இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கவோ அல்லது சக்திமிக்கதாக மாற்றவோ அவர் எந்த பணியையும் செய்யவில்லை.
இந்திய விமானப்படையிடம் இருக்கும் பழைய போர் விமானங்கள் திரும்பத் திரும்ப விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே இந்திய விமானப்படைக்கு புதிய விமானங்கள் தேவைப்படுகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்பு நலனை கவனத்தில் கொண்டு, சூழ்நிலையை காங்கிரஸாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
டஸால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து, ரஃபேல் ரக போர் விமானங்களை டஸால்ட் நிறுவனம் தயாரிக்க வேண்டும். அதன்படி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக டஸால்ட் தேர்வு செய்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி, ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதை மத்திய அரசும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்நிலையில், தில்லியில் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை சந்தித்து, ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தி விரைந்து அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com