2022-இல் நாட்டின் பொருளாதார மதிப்பு இருமடங்காகும்: பிரதமர் மோடி

எதிர்வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்களாக (சுமார் ரூ.359 லட்சம் கோடி) அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் பொது மக்களுடன் மெட்ரோ ரயிலில் வியாழக்கிழமை பயணித்த பிரதமர் மோடி.
தில்லியில் பொது மக்களுடன் மெட்ரோ ரயிலில் வியாழக்கிழமை பயணித்த பிரதமர் மோடி.


எதிர்வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5 லட்சம் கோடி டாலர்களாக (சுமார் ரூ.359 லட்சம் கோடி) அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது தற்போதைய மதிப்பைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் எனக் கூறிய அவர், அதில் ஏறத்தாழ 50 சதவீதத் தொகை உற்பத்தி மற்றும் விவசாயத்தின் மூலம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தில்லியில் துவாரகா பகுதியில் சர்வதேசத் தரத்திலான மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் ரூ.25,703 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் அந்த மையமானது உலகிலேயே 10-ஆவது பெரிய அரங்கமாக உருவாகவுள்ளது. ஒரே நேரத்தில் 11,000 பேர் அந்த அரங்கில் அமரும் வகையில் அது வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான முதற்கட்ட திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு பல்வேறு நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக எந்த சமரசமும் இன்றி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதேபோன்று தேசத்தின் நலன் காக்க எத்தகைய கடினமான முடிவுகளை எடுக்கவும் அரசு தயங்கியதில்லை. அத்தகைய முடிவுகளில் சரக்கு - சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் மூலம் 17 மத்திய வரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மாநில வரிகள் ஒழிக்கப்பட்டு, ஒரே சீரான வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தற்போது புதிய சீர்திருத்த நடவடிக்கையாக தேனா வங்கி, பரோடா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
இந்த நடவடிக்கையின் வாயிலாக நாட்டின் மூன்றாவது பெரிய வங்கி கட்டமைக்கப்பட உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீராக உயர்ந்து வருகிறது. அடுத்து வரும் நாள்களில் அந்த விகிதம் 8 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. 
சில்லறை வர்த்தகம் மற்றும் தகவல் - தொழில்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது 2022-இல் தேசத்தின் பொருளாதார மதிப்பு இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த காலகட்டத்தில் அம்மதிப்பு ரூ.359 லட்சம் கோடியாக இருக்கும். அதில் ரூ.143 லட்சம் கோடி உற்பத்தி மற்றும் வேளாண்மை துறை மூலமாக கிடைக்கும்.
இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை மத்திய அரசு அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. 
அதன் காரணமாகவே, தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் செல்லிடப்பேசிகளில் 80 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன. இதன் மூலம் அன்னியச் செலாவணி பரிவர்த்தனை செலவினங்கள் ரூ.3 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக, தில்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். தெளலா கான் நிறுத்தத்தில் இருந்து விழா நடைபெறும் துவாரா பகுதி வரை மொத்தம் 18 நிமிடங்கள் அவர் ரயிலில் பயணித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com