காஷ்மீர் காவலர்கள் படுகொலை எதிரொலி: இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து 

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று காவலர்கள் வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக.. 
காஷ்மீர் காவலர்கள் படுகொலை எதிரொலி: இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து 

புது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று காவலர்கள் வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களின் விளைவாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இம்மாத இறுதியில்நடைபெறவுள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தின் இடையே சந்திக்க உள்ளதாக வியாழனன்று தகவல் வெளியானது

தில்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இருவரும், இம்மாத இறுதியில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளனர்.  பாகிஸ்தான் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, ஐநா பொதுக்குழுவினை ஒட்டி  இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் இந்த சந்திப்பு நடைபெறும்.

நாங்கள் தற்போது சந்திப்புக்கு சம்மதம் மட்டுமே தெரிவித்துள்ளோம். ஐநாவில் உள்ள இருநாடுகளின் நிரந்தர தூதரகங்கள் இதற்கான ஏற்பாடுகளை இணைந்து செய்யும். அதுவரை இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட உள்ளது என்பது குறித்து நாம் பொறுத்திருக்க வேண்டும், 

அதேசமயம் இதன் மூலம் இரு நாடுகளுக்கான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதாக கருதக் கூடாது 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அதேசமயம் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் வியாழன் இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாயமான 2 உயர் அதிகாரிகளும், 1 காவலரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக புதனன்று ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரரைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தை அறுத்திருந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. 

இந்நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மூன்று காவலர்கள் வெள்ளியன்று படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தானின் வேண்டுகோளையடுத்து இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தின் இடையே சந்திப்பதுஎன்று முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் எல்லைப் பகுதியில் இருநாட்களாக நடைபெறும் சம்பவங்கள் இத்தகைய பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக இல்லை. எனவே இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com