கேரள பேராயரிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கேரளத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் ஃபிராங்கோ முலக்கலிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழுவினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். 
கேரள பேராயரிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை


கேரளத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் ஃபிராங்கோ முலக்கலிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழுவினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். 
கடந்த புதன்கிழமை முலக்கல் மீதான விசாரணையைத் தொடங்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கே. சுபாஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், தொடர்ந்து 7 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, அவரது வாக்குமூலத்துக்கும், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்துக்கும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 
இதனையடுத்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறப்பு புலனாய்வு குழுவினர் பேராயரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். இது குறித்து காவல் துறைத் தலைமை இயக்குனர் லோக்நாத் பெஹரா தெரிவித்ததாவது:
பேராயர் முலக்கலைக் கைது செய்வது குறித்து புலனாய்வுக் குழு அதிகாரி முடிவு செய்வார். அவருக்கே அதற்கான முழு அதிகாரமும் உள்ளது.
முலக்கல் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாலும், அது குறித்த விசாரணை இன்னும் நடைபெறாத காரணத்தால், அவரைக் கைது செய்வதற்குத் தடையேதும் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பேராயர் முலக்கல் மீதான விசாரணை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிராங்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
திருச்சபை பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுவிப்பு: ஜலந்தர் திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகம் சார்ந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாகவும், தற்காலிகமாக தன்னை விடுவிக்க வேண்டியும் பேராயர் முலக்கல், புனித போப் ஃபிரான்சிஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 
இந்நிலையில், அனைத்து அசாதாரண சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, பேராயர் முலக்கலின் கோரிக்கையை போப் ஃபிரான்சிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். ஜலந்தர் திருச்சபை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும் அவரைத் தற்காலிகமாக விடுவித்துள்ளார். மாவட்டத்தின் இடைக்கால நிர்வாகப் பணிகளைப் பேராயர் ரூஃபினோ கிரேசியாஸ் கவனித்துக் கொள்வார்' என்று கத்தோலிக்க பேராயர் குழு வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து 13-ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் உள்பட பல்வேறு கத்தோலிக்க அமைப்பினர், போப்பின் இந்த உத்தரவை வரவேற்று, இது எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி' என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com