சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல்: அஜித் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி

சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் அந்த மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையிலான சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப்
சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தல்: அஜித் ஜோகியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி


சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் அந்த மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையிலான சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட இருப்பதாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
பாஜக ஆட்சியில் உள்ள சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு தொடர்ந்து 3 முறை ஆட்சியில் உள்ள முதல்வர் ரமண் சிங் தலைமையிலான அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.
இப்போது, புதிய கூட்டணி அறிவிப்பால், மாநிலத்தில் முதல்முறையாக மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் பேச்சு நடத்தி வந்தது. இந்நிலையில், அஜித் ஜோகியுடன் கூட்டணி அமைப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், அஜித் ஜோகியின் கட்சி 55 இடங்களிலும் போட்டியிடும் என்று தெரிகிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு, காங்கிரஸ் கட்சி 7 முதல் 9 தொகுதிகள் வரையே ஒதுக்க முன்வந்ததாகத் தெரிகிறது. எனவே, மாயாவதி புதிய கூட்டணி அமைத்துவிட்டார் என்று தோன்றுகிறது. இதன் மூலம் சத்தீஸ்கரில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் காங்கிரஸின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் - சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அஜித் ஜோகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com